- அரபிக்கடலில் கேரளாக் கடற்கரையோரம் காணப்படும் காற்றழுத்த தாழ்வு நிலை கேரளா மாநிலத்தின் திருச்சூர் ஊடாக தமிழ் நாட்டின் நிலப் பகுதிக்கு வந்து பின்னர் பாக்கு நீரிணையூடாக வடக்கு மாகாணத்திற்கு அருகாக குறிப்பாக மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு மிக அருகாக வந்து வங்காள விரிகுடாவுக்குள் நுழையும்.
- எதிர்வரும் 27.10.2026 அதிகாலை 4.00 மணிவரை வங்காள விரிகுடாவில் தனிச் சுழற்சியாகக் காணப்பட்டு பின்னர் அதேதினம் காலை 5.00 மணியளவில் ஏற்கெனவே மத்திய வங்காள விரிகுடாவில் தனித்துவம் பெற்று நிலை கொண்டிருக்கும் அர்னாப் புயலுடன் இணைந்து கொள்ளும்.
இதனால் - ஏற்படும் நாடளாவிய காலநிலைக் கணிப்பு-மாகாணரீதியாக.
ஏற்கனவே கனமழை கிடைத்திருப்பதாலும் மேலும் 72 மணத்தியாலங்களுக்கு கனமழை கிடைக்கும் என்பதனாலும் மத்திய, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை மாவட்ட மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு மாகாணத்தில்:
இன்று அதிகாலை முதல் வடக்கு மாகாணம் முழுவதும் (மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா) மழை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த மழை எதிர்வரும் 27.10.2026 வரை இடையிடையே தெளிவான வானம், மேகமூட்டம், வெயில் எனக் குழப்பமான வானிலைக் கோலங்களோடு கிடைக்கும்.
வடக்கு மாகாணத்தில் இன்று பிற்பகல் முதல் 26.10.2026 நள்ளிரவு வரை பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இக்காலத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களும் மிகக்கனமழையைப் பெறும். குறிப்பாக ஏனைய மாவட்டங்களை விட மன்னார் மாவட்டமும் யாழ்ப்பாண மாவட்டமும் அதிக மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
இன்று (25.10.2026 ) மாலை முதல் 26.10.2026 நள்ளிரவு வரை வடக்கு மாகாணம் விசேட அவதானிப்புக்குரியது.
வடக்கு மாகாணத்தின் ஒரு சில தாழ்நிலப் பகுதிகளில் எதிர்வரும் 26.10.2026 அன்று (25ம் திகதி பிற்பகல்/ மாலை முதல்) சிறிய அளவிலான வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய மழை கிடைக்கக்கூடும்.
கிழக்கு மாகாணத்தில்:
இன்று காலை முதல் எதிர்வரும் 27.10.2026 காலை வரை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களும் பரவலாக கனமானது முதல் மிகக்கனமானது வரை மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு சில மணிநேரம் தொடர்ச்சியாக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேல் மாகாணத்தில்:
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை இன்று காலை முதல் எதிர்வரும் 27.10.2026 வரை அதிகரித்து ஒரு சில பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கக் கூடும். குறிப்பாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளும் இக்காலப் பகுதியில் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
இன்றும்(25.10.2026) நாளையும் (26.10.2026) கொழும்பில் கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உண்டு. அதே போல் கம்பஹா மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தக் கூடிய மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடமேல் மாகாணத்தில்:
புத்தளம், சிலாபம் நீர்கொழும்பு பகுதிகளும் இன்று காலை முதல் எதிர்வரும் 28.10.2026 வரை பரவலாக கனமானது முதல் மிகக்கனமானது வரை மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
வடமத்திய மாகாணத்தில்:
அனுராதபுர மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் கணிசமான அளவு மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பதிவாகலாம். பொலன்னறுவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மத்திய மாகாணத்தில்:
அரபிக் கடலில் தோன்றிய சுழற்சி வங்காள விரிகுடாவுக்கு நுழையும்போது அதிக ஈரப்பதன் மிக்க காற்றைத் தென்மேல் தாழ்நிலங்களினூடாக ஈர்க்கும் என்பதனால் நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகள் இக்காலப்பகுதியில் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளன.
சப்ரகமுவா மாகாணத்தில்:
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள் இக்காலப்பகுதியில் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இரத்தினபுரி மாவட்டம் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணத்தில்:
பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இடையிடையே மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தெற்கு மாகாணத்தில்:
காலி மாவட்டத்தின் கணிசமான பகுதிகள் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டையின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
- ஏற்கனவே கனமழை கிடைத்திருப்பதாலும் மேலும் 72 மணத்தியாலங்களுக்கு கனமழை கிடைக்கும் என்பதனாலும் மத்திய, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை மாவட்ட மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
- இக்காலத்தில் மழை கிடைக்கும் போது செறிவான இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் வாய்ப்புள்ளன. எனவே மக்கள் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம்.
- வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு தென்கிழக்கு கடற்பகுதிகள் அரபிக்கடல் சுழற்சியின் நகர்வு மற்றும் அர்னாப் புயல் காரணமாக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்கு கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் எக்காரணம் கொண்டும் செல்லக் கூடாது.
- பொதுவாக அயனப் பிரதேசத்தில் தோற்றம் பெறும் வளிமண்டல அழுத்த வேறுபாட்டு நிகழ்வுகள் ( சூறாவளி, புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு நிலை, காற்றுச் சுழற்சி போன்றன.) கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்வதே வழமை. ஆனால் அர்னாப் புயலின் மைய ஈர்ப்பு விசையின் வலுவினாலே அரபிக்கடலில் உள்ள சுழற்சி கேரளா, தாமிழ்நாடு ,பாக்கு நீரிணையூடாக கிழக்கு நோக்கி நகர்ந்து அர்னாப் புயலுடன் இணையவுள்ளது.
கடந்த வருடமும் இவ்வாறு மேற்கு நோக்கி சென்ற சுழற்சி ஒன்று மீள கிழக்கு நோக்கி நகர்ந்து டித்வா புயலுடன் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழ்வுநிலை, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அர்னாப் புயலாக மாற்றம் பெற்று வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாகமுத்து பிரதீபராஜா -
