நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் நினைவேந்தலுக்குத் தயாராகும் தாயகம்…


தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் 

நினைவேந்தலுக்குத் தயாராகும் தாயகம்!

பார்த்தீபன்-ஈழம்-22-11-2026

தமிழ்த் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், தமிழர் தாயகமெங்கும் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா பொலிஸாரின் தலையீடுகளும் அச்சுறுத்தல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நினைவேந்தலுக்காக அமைக்கப்பட்ட பதாகைகள் அகற்றப்படுவதும், ஏற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதும், நினைவுகூரும் உரிமைக்கு எதிரான அரச ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. ஆட்சி மாறினாலும் தமிழர்களின் நினைவுகளை ஒடுக்கும் அரசியல் மாறவில்லை என்ற கொடுமையான யதார்த்த நிலையை இந்தச் சம்பவங்கள் மீண்டும் உணர்த்தி நிற்கின்றன.

கிளிநொச்சியில் பொலிஸாரின் அத்துமீறல்

கிளிநொச்சி டிப்போச் சந்திப் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் வீதி வளைவுகள் நள்ளிரவு வேளையில் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், இந்த ஏற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அகற்றப்பட்ட பதாகைகள் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் அங்கிருந்தவர்களுடன் முரண்பட்டதுடன், தகாத மற்றும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். எட்டுப் பேரையும் கைது செய்தபோது, “பயங்கரவாதிகளை நினைவுகூர்வதற்கு இங்கு எவருக்கும் இடமில்லை” என்று பொலிஸார் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட எட்டுப் பேரிடமும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், பொலிஸ் நிலையத்துக்கு எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அகற்றப்பட்ட பதாகைகள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக மாவீர்ர் தினத்தின்போது கிளிநொச்சியில் வைக்கப்பட்ட பதாகைகளே இவ்வாறு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நினைவுகூரலுக்கும் பொலிஸ் அனுமதி தேவையா?

மாவீரர் நினைவேந்தல் என்பது தமிழர் சமூகத்தின் வரலாற்று நினைவோடும், போரின் கூட்டு அனுபவங்களோடும், இழப்புகளோடும் பின்னிப் பிணைந்த ஒன்று. போரில் உயிரிழந்த தமது பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை நினைவுகூர்வது குடும்பங்களின் உணர்வுரிமை. அத்துடன் அது சர்வதேச நியதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூகத்தின் நினைவுரிமையுமாகும்.

ஆனால், இந்த அடிப்படையான உரிமையைக்கூட ஒவ்வொரு ஆண்டும் பொலிஸ் தலையீடுகளுக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும் மத்தியில் நிலைநாட்ட வேண்டிய சூழலுக்கு ஈழத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். துயிலும் இல்லங்களைச் சுத்தப்படுத்துவது, நினைவிடங்களை ஒழுங்குபடுத்துவது, பதாகைகள் அமைப்பது, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என ஒவ்வொரு நடவடிக்கையிலும் அச்சுறுத்தல்களும் தடைகளும் குறுக்கிடுகின்றன.

மாவீரர் நினைவேந்தலைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தும் பொலிஸாரின் இத்தகைய அணுகுமுறை அடிப்படையிலேயே கேள்விக்குரியது. இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான உரிமையைப் பயங்கரவாதம் என்ற சொல்லால் மறுக்க முடியாது. மக்களின் நினைவுகூரும் உரிமையைப் பறிப்பது என்பது சர்சவதேச சட்டங்களுக்கு மாறான மிகவும் அடக்குமுறைச் செயற்பாடாகும்.

ஆட்சி மாறியும் அணுகுமுறை மாறவில்லையா?

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, தமிழர் தாயகத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகின. கடந்தகால அரசாங்கங்களின் ஒடுக்குமுறை அணுகுமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாகப் புதிய ஆட்சி பார்க்கப்பட்டது. இனப்பிரச்சினை, அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், இராணுவ ஆக்கிரமிப்பு, நினைவேந்தல் உரிமை உள்ளிட்ட விடயங்களில் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் காணப்பட்டது.

ஆனால், மாவீரர் நினைவேந்தல் விடயத்தில் தொடரும் பொலிஸ் தலையீடுகள் அந்த எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. நினைவேந்தல் ஏற்பாடுகளுக்காக நள்ளிரவில் பதாகைகள் அகற்றப்படுவதும், ஏற்பாட்டாளர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுவதும், நினைவுகூர்வதற்கான உரிமை தொடர்பில் பொலிஸார் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்துவதும் புதிய அரசாங்கத்தின் ஜனநாயக அணுகுமுறை குறித்த முகத்தை நன்றாக வெளிப்படுத்துகின்றன.

தடைகளின் மத்தியிலும் தயாராகும் தாயகம்

இப்படியாக நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழர் தாயகம் மாவீரர் நாளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. துயிலும் இல்லங்களைத் துப்புரவு செய்வது முதல் நினைவிடங்களை ஒழுங்குபடுத்துவது வரை மக்கள் தங்களால் இயன்ற பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், இளைஞர்கள் எனப் பலரும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இராணுவக் கண்காணிப்புக்கும் பொலிஸ் விசாரணைகளுக்கும் மத்தியில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. துயிலும் இல்லங்களுக்குச் செல்வதற்கும், விளக்கேற்றுவதற்கும், மலர் தூவுவதற்கும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட காலங்களும் இருந்தன. ஆயினும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தமது நினைவுகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்தனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள் என்பது ஒரு தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றையும், போரின் நினைவுகளையும், இழப்புகளையும் சுமந்து நிற்கும் வரலாற்று அடையாளங்கள். அவற்றைச் சுற்றி உருவாகும் மக்கள் ஒன்றுகூடல் என்பது ஶ்ரீலங்கா அரசின் கண்களில் தெரிவதைப்போல வெறுமனே ஒரு நிகழ்வல்ல. மறக்கப்படுவதற்கு எதிராக தமிழினம் தனது நினைவுகளை நிலைநிறுத்தும் ஒரு போராட்டமாகும். இவ்வாறு பதாகைகளை அகற்றுவதன் மூலம் மக்களின் நினைவுகளை அகற்றிவிட முடியாது. நினைவிடங்களுக்கான பாதைகளைத் தடுத்து நிறுத்துவதால் வரலாற்றின் பாதையை மூடிவிடவும் முடியாது.

நினைவேந்தல் உரிமையை தடுக்காதே! பறிக்காதே!!

போரில் இறந்தவர்களை நினைவுகூரத் தடையில்லை என்று ஶ்ரீலங்கா மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். இப்படித்தான் காலம் காலமாக அரசு சொல்கிறது. ஆனால் இப்படிச் சொல்லிவட்டுத் தாயகத்தில் அடக்குமுறைகளை அவிழ்த்து விடுகிறது. எனவே மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்துவதையும், கைது செய்வதையும், நினைவுச் சின்னங்களையும் பதாகைகளையும் அகற்றுவதையும் நிறுத்த வேண்டும். கிளிநொச்சியில் அகற்றப்பட்ட பதாகைகளை மீளக் கையளிப்பதுடன், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக்கூடாது.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான மக்களின் உரிமையை பறிப்பதே வழக்கமாகத் தொடர்கிறது. 

அனுர ஆட்சியே, 

மாவீரர் நினைவேந்தலில் கை வைக்காதே! 

துயிலும் இல்லங்களை நோக்கிச் செல்லும் மக்களின் பாதைகளை மறிக்காதே! 

தமிழர்களின் நினைவுகளைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்காதே!

இவ்வாறாகத் தடைகள் இருந்தாலும் தமிழர் தாயகம் தயாராகிறது. அச்சுறுத்தல்கள் இருந்தாலும் மக்கள் மாவீரர்களை நினைவுகூரத் தயாராகிறார்கள். ஏனெனில், நினைவுகூர்வது என்பது மக்களின்  உரிமை. அந்த உரிமையைப் பறிப்பதற்கு ஶ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் அதிகாரம் இல்லை. இத்தகைய அடக்குமுறைகள் தமிழர் தாயகத்தில்  மாவீரர் தின நிகழ்வுகளை இன்னமும் எழுச்சிகரமாக்கும் என்பதில் ஐயமில்லை. 

ஒத்தவை: