இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் – இன மரபும் பண்பாட்டுச் சமூகவியலும்
ஜிஃப்ரி ஹாசன் November 21, 2022 | Ezhuna
இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக ‘இலங்கை முஸ்லிம்கள் – இனத்துவ மரபும் சமூகவியலும்’ என்ற இந்த கட்டுரைத்தொடர் அமைகிறது. குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் என்போர் இன மரபு சார்ந்து அரபு மூலத்தையா அல்லது தமிழ் மூலத்தையா தங்கள் இனத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ளனர், இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ அடையாளமாக தமிழைக்கொள்ள முடியுமா?, ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம்களுக்குள்ளே இருக்கும் பண்பாட்டு வேறுபாடுகள், உள்ளக வேறுபாடுகள் மற்றும் முரண்கள் அவற்றின் சமூகவியல் தன்மை ஆகியவற்றை இந்தத் தொடர் பரந்த ஆய்வுக்குட்படுத்துகிறது.
அறிமுகம்
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் (ஆய்வுகளில் போதாமை இருக்கிற போதிலும்) ஆய்வுகளின் அளவுக்கு அவர்களின் இனத்துவ மரபு, சமூகவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் குறித்து முஸ்லிம் வரலாற்றாய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சார்பியத்தன்மையும், மதப் புனித நோக்குகளையும் கடக்க முடியாத அகச் சிக்கலுடன் இருப்பவை. இந்த ஆய்வுகளை நோக்கும் போது முஸ்லிம்கள் குறித்து ஓரளவு அறிவியல் தன்மையுடன் கூடிய ஆய்வுகள் இங்கு நிகழவில்லை என்பதே உண்மை. இந்தப் புள்ளியிலிருந்து இலங்கை முஸ்லிம்களின் இனத்துவ (ethnic) மூலத்தையும், வரலாற்றையும், இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்தினுள் கரைந்திருக்கும் பன்முக இன மரபுகளின் கலவையையும் தேடிய பக்கச்சார்போ, புனித நோக்குகளோ அற்ற ஒரு பரந்த அறிவியல்தன்மையுடன் கூடிய ஆய்வாக இந்தக் கட்டுரைத் தொடரை தொடக்குகிறேன்.
இலங்கை முஸ்லிம்கள் பற்றிய இதுவரைகால வரலாறு பெரும்பாலும் அவர்களின் அரபு மூலத்தையே அதிகம் கவனப்படுத்துகிறது. அதன் பின் அரேபியாவில் நிகழ்ந்த இஸ்லாத்தின் தோற்றத்துடன் இலங்கை முஸ்லிம் வரலாற்றை இணைத்து நோக்குகிறது. உண்மையில் இந்த நோக்குகளுக்கு அப்பாலும் செல்வதன் மூலமே இலங்கையில் முஸ்லிம்களின் இனத்துவ மூலத்தை கண்டறிய முடியும் என நம்புகிறேன். இலங்கைக்கு அரபுகளின் வருகையுடனோ, இஸ்லாத்தின் வருகையுடனோ முஸ்லிம்களின் இனத்தொடர்ச்சியை சுருக்கிக்கொள்வது, அதன் அசல் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவப் போவதில்லை.
பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் எனும் இன அடையாளத்துக்குள் பல்வேறு இனங்களின் கலவையைக் காணலாம்.
இலங்கைச் சோனகர் (Ceylon Moors).
இந்தியச் சோனகர் (Indian Moors)
மலேயர்கள் (Malays)
ஜாவாக்கள் (Javas)
ஆப்கனியர்கள் (Afghans)
மேமன்கள் (Memons)
பெங்காலிகள் (Bengalis)
போராக்கள் (Bohras)
கோஜாஸ் (Khojas)
என பல்வேறு இனக்குழுக்களின் கூட்டுத் தொகுதியையே முஸ்லிம் எனும் ஒற்றை அடையாளம் பூண்டுள்ளது.
(தொடரும்)