லெபனானில் இஸ்ரேல் இராணுவம் முழுமையாக வாபஸ் பெற மறுப்பு
காசாவிலும் போர் நிறுத்த காலத்தில் 132 பலஸ்தீனர் பலி
February 19, 2025 தினகரன்
காசாவில் இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகி வரும் நிலையில் லெபனானுடன் பலவீனமான போர் நிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்க இஸ்ரேல் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்ததை அடுத்து தனது துருப்புகளை தெற்கு லெபனானில் இருந்து வாபஸ் பெற்றபோதும் ஐந்து இடங்களில் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையின் கீழ் துருப்புகளை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் (18) முடிவுற்றது. தெற்கு லெபனானின் கிராமங்களில் இருந்து துருப்புகள் வாபஸ் பெற்றபோதும் ஐந்து மூலோபாய இடங்களில் தனது துருப்புகளை இஸ்ரேல் தொடர்ந்து நிலைநிறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
உடன்படிக்கையின்படி இஸ்ரேலிய துருப்புகள வாபஸ் பெற்ற பின் அங்கு லெபனான் இராணுவம் நிலைநிறுத்தப்பட வேண்டும். அந்த வகையில் நேற்றுக் காலை லெபனான் படையினர் பல இடங்களில் நிலைகொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் கண்காணிப்பில் ஈடுபட முடியுமான மற்றும் வடக்கு இஸ்ரேலிய தொலைத்தொடர்புகளை பாதுகாக்க முடியுமான ஐந்து மலைப் பிரதேசங்களில் இஸ்ரேலிய துருப்புகள் தொடர்ந்து நிலைகொள்வதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் நவாட் ஷொஷானி தெரிவித்துள்ளார்.
இந்த தற்காலிக நடவடிக்கைக்கு அமெரிக்கா தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அனுமதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த காலக்கெடுவில் படையினர் முழுமையாக வாபஸ் பெறப்படவில்லை என்று லெபனான் ஜனாதிபதி ஜேசப் அவுன் வலியுறுத்தியுள்ளார். ‘இஸ்ரேலிய எதிரியை நம்ப முடியாது’ என்றும் அவர் சாடியுள்ளார்.
லெபனான் நிலத்தில் நிலைகொள்ளும் இஸ்ரேலிய துருப்புகள் ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டி உள்ளதாகவும் முழுமையாக வாபஸ் பெறுவதை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள லெபனானுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அவரது பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் முழுமையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யும்படி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையையும் லெபனான் கோரவுள்ளது.
எனினும் ஹிஸ்புல்லா அமைப்பு போர் நிறுத்த மீறல்களில் ஈடுபடுவதற்கு எதிராக அந்த ஐந்து இடங்களிலும் பாதுகாப்பு முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று லெபனானுடனான இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டு துருப்புகள் நிலைநிறுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெற்ற பின்னர் தமது கிராமங்களுக்கு திரும்பிய மக்கள் ஒட்டுமொத்த கிராமமும் அழிக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். ‘ஒட்டுமொத்த கிராமமும் இடிபாடாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அனர்த்த வலயமாக உள்ளது’ என்று தமது கிராமத்திற்கு திரும்பிய கிபர் கிலா என்பவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான எல்லை தாண்டிய தாக்குதல்களே போராக வெடித்ததது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்தின்படி 60 நாட்களில் இஸ்ரேலிய துருப்புகள் தெற்கு லெபனானில் இருந்து வாபஸ் பெற்று அங்கு லெபனான் இராணுவம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும்.
இந்தக் காலக்கெடு பின்னர் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.
மறுபுறும் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி தொடக்கம் அமுலில் இருக்கும் காசா போர் நிறுத்தத்தையும் இஸ்ரேல் 266 தடவைகள் மீறி இருப்பதாக பலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த போர் நிறுத்த மீறல்களின்போது குறைந்தது 132 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் அதிக வன்முறைகள் மத்திய காசாவில் இடம்பெற்றிருப்பதோடு அங்கு 110 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து ரபாவில் 54 சம்பவங்களும் காசா நகரில் 49 சம்பவங்களும் பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் பணயக்கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்றம் உட்பட இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை இஸ்ரேல் ஆரம்பிக்கும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார். அதேபோன்று காசாவை இராணுவமயமற்ற பகுதியாக மாற்றுவதற்கு இஸ்ரேல் அழைப்பு விடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்ட போர் நிறுத்தம் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டி இருந்தபோதும் அந்தப் பேச்சுவார்த்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என்று மத்தியஸ்த நாடான கட்டார் தெரிவித்தது.
காசாவில் ‘ஹிஸ்புல்லா வடிவம்’ ஒன்றை ஏற்க முடியாது என்பதோடு அதனால் காசா இராணுவ மயமற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டும், அதேபோன்று பலஸ்தீன அதிகாரசபையும் இருக்கக் கூடாது என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் சார் தெரிவித்தார்.
