இந்திய பாகிஸ்தான் கூட்டுப் போர் முனைப்பை நிறுத்துவோம்!
புதிய ஈழப் புரட்சியாளர்கள் 10-05-2025
`இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடந்துவரும் போர் முனைப்புகள் காஸ்மீர் பயங்கரவாதம் சம்பந்தமானது.காஸ்மீரில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லைப் புறத்தைத் தாண்டி, காஸ்மீர் பயங்கரவாதிகளை ஏவிவிட்டு பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் சம்பந்தமானது`. என்பதாகக் கூறப்படுகின்றது.
காஸ்மீரில் பயங்கரவாதம் இருக்கின்றதென்றால் அதற்குக் காரணம் இந்தியாவும் பாகிஸ்தானும் காஸ்மீரில் இருப்பது தான்.
காஸ்மீரை பங்கு போட்டு கபளீகரம் செய்து கொண்டு இரண்டு நாடுகளும் `பயங்கரவாதம்` பற்றிப் பேசுவது, உலக நாடுகள் ஒத்து ஊதுவது, நமது மார்க்சிய ஜனாதிபதி அனுரா நடுநிலை வகித்து `பயங்கரவாதம் எங்கிருந்து வந்தாலும்` கண்டிப்பது, அபத்தம்.அபத்தத்திலும் அபத்தம்!
போர் குறித்த செய்திகளும் ஊடகங்களும்:
`பூமாலையை` அனுபவித்த ஈழமக்களுக்கு `குங்குமம்` எப்படியிருக்கும் என்பதை அனுமானிக்க பாக்கி சர்மா தேவை இல்லை!
எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி பெற்றவர்கள் இன்றும் இலங்கை நாடாளமன்றத்தில் இருக்கின்றார்கள்.
அனுராதபுர வெகுஜனப் படுகொலை மூலம் தான் ஜே.ஆர்.ஆட்சி திம்பு பேச்சுவார்த்தைக்குப் பணியவைக்கப்பட்டது.
தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அரசு இந்தியாவில் இருந்த பயிற்சி முகாம்களைத் தகர்த்தெறிந்திருக்க வேண்டும்.
ஆக இதுவெல்லாம் பைத்தியக்காரப் புலம்பல்.
இலங்கை என்கிற ஒரு சின்னஞ்சிறு அயல் நாட்டில் இந்தியாவின் நடத்தை போதும் இந்த புழுகு மூட்டைகளை அம்பலப்படுத்த! நிற்க.
யுத்த பீரிகையின் மத்தியில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் IMF இடம் பெற்றுள்ளது பாகிஸ்தான். இந்தியாவில் நிதி மூலதன வேட்டை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டால் எவ்வகையிலும் குறைந்ததல்ல.
இரண்டும் இரு பெரும் விவசாய நாடுகள். குடிமக்கள் என்போர் ஏழை எளிய உழைக்கும் விவசாய மக்கள்.
பசியாலும் பஞ்சத்தாலும் பிணியாலும் துன்பத்தாலும் உழலுகின்ற, ஏர் பிடிக்க நிலமில்லாத கூலிகள். போர் அவர்களுக்கு தேவை இல்லை.
ஆட்சிமுறையில், அரசாங்கத்துக்கும், அரசுக்குமான உறவில் பாகிஸ்தானில் அரசு (படை), அதிக ஆதிக்கம் கொண்டதாக உள்ளது. ஒப்பீட்டில் இந்தியாவில் இது அப்பட்டமாக தெரிகிற நிலையில் இல்லை.அவ்வளவு தான்.இரண்டு குடியரசும் பாசிச சர்வாதிகாரம் தான்.
பாகிஸ்தானிய பாசிசத்துக்கு ஒரு சமூக அடித்தளத்தைத் திரட்டித் தக்க வைக்க இஸ்லாமிய மதவாதம் உதவுகின்றது, அதுவே இந்தியாவுக்கு இந்துத்துவா என்கிற இந்து மதவாதமாக உள்ளது.
இரண்டு பாசிச ஆட்சிகளுக்கும் எதிராக எழுந்துவரும் மக்களின் எதிர்ப்பை திசை திருப்பவே இந்த யுத்தப் பேரிகை `பெருந்தேசிய வெறி` உதவும்.
மேலும் வரவுள்ள பெரும்போருக்கு ஆயுதத்தளவாடங்களை சரி பார்க்கவும், பிரான்ஸ்சும் சீனாவும் ஆயுதம் விற்கவுமே உதவும்.
இரு நாட்டு உழைக்கும் மக்களுக்கும் இதனால் எந்தப்பயனும் இல்லை.
இந்தியாவின் சிந்து நதி நீர்த் தடைப் பிரச்சனை யுத்தத்தைக் காட்டிலும் தீவிரமானது. எல்லை தாண்டாமல் நீரைத் தடுப்பது பயங்கரவாதமே ஆகும்.
மாவிலாறு அணை உடைக்கப்பட்டபோது இதைப் பயங்கரவாதம் என்று கூறித்தான் இந்தியாவும் இணைந்து மீண்டும் போரைத் தொடக்கினார்கள்.
கர்நாடகா காவிரி நீர்ப் பிரச்சனையில் `தமிழன் தெலுங்கன்` இனவெறி கக்கிய திராவிடக்கும்பல், சிந்து நதிப் பிரச்சனையில் இந்திய இராணுவத்தின் வீரப்போருக்கு ஆதரவாக ஊர்வலம் போகின்றது.
இந்த இந்திய விரிவாதிக்க ஆதரவு நிலை தான் ஈழப்படுகொலைக்குத் துணை போகவும் இவர்களைத் தள்ளியது.
சமரச சக்திகளான இவ் வர்க்கப் பிரிவை நட்பு சக்திகளாக நம்பியதால்தான் - முள்ளிவாய்க்காலில் புலிகளின் கூக்குரலுக்கு இவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆனந்தபுரம் நிறைவேற வழி வகுத்ததால்தான் புலிகள் தம்மையே அழித்துக் கொள்ள நேரிட்டது.
இறுதியாக, எல்லை தாண்டி வந்து மன்னாரில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர் பிரச்சனையை ``மனிதாபிமானமாக`` அணுகுவது போல, எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதத்தையும் அணுகலாமே, யுத்தம் எதற்கு?
இந்திய பாகிஸ்தான் கூட்டுப் பாசிசமே, காஸ்மீரை விட்டு வெளியேறு!
வாக்களித்தவாறு காஸ்மீர் சர்வ ஜன வாக்கெடுப்பு நடத்து!
சிந்து நதி ஒப்பந்தத்தை மீறாதே, விவசாயிகள் மீது கைவையாதே!
அநியாய அதர்ம ஆக்கிரமிப்புப் போர் முனைப்பை கை விடு, பஹல்காம் படுகொலைக்கு மக்கள் விசாரணை நடத்து!
ஈழ மக்களே காஸ்மீர் விடுதலைக்கு குரல் கொடுப்பீர்!
இந்திய விரிவாதிக்கத்துக்கு இலங்கை நாட்டை அடகு வைத்த அனுரா ஆட்சியைத் தூக்கியெறிய இலங்கையரே ஒன்றுபடுவீர்!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
10-05-2025