நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

மே நாள் 2026 வாழ்க! தேசிய, தொழிலாளர் புரட்சி ஓங்குக!!


மே நாள் வாழ்க! 

தொழிலாளர் மே நாள் வாழ்க!  முள்ளிவாய்க்கால் தேசிய தினம் வெல்க!!

அன்பார்ந்த தமிழீழ மக்களே, 

போர் ஓய்ந்த போராளிகளே, ENB வாசகர்களே, தோழர்களே, பெண்களே, இளையோரே அனைவருக்கும் புரட்சிகர மே முதல் நாள், மே 18 முள்ளிவாய்க்கால் நாள் வாழ்த்துகள்.

மே முதல் நாள் உலகத் தொழிலாளர் தினம், மே 18 முள்ளிவாய்க்கால் ஈழத் தேசிய தினம். ஈழ தேசியப் பிரச்சனை உலக ஜனநாயகப் பிரச்சனையின் பகுதியாகிவிட்ட சகாப்தத்தில் நாம் வாழ்கின்றோம்.

எனவே தான் மே முதல் நாளையும், பதினெட்டாம் நாளையும் எமது செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளவும், சரிபார்த்து முன் செல்லவுமான பொதுத் தருணமாக நாம் வருடாந்தம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.

எமது மே 2026 முழக்கங்கள்: அதாவது தொடர்ந்துவரும் உடனடி எதிர்காலத்தில் நமது நடைமுறை அரசியல் -பிரச்சாரச்-செயற்பாடுகளை, நெறிப்படுத்தும் கொள்கை,கோட்பாட்டு நிலைப்பாடுகள்.

புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!

2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!

உலகெங்கும் வியாபித்துள்ள அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்கப் போராடுவோம்!

3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!

4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு தம் நாட்டு உழைக்கும் மக்களையும்,

அண்டை அயல் நாடுகளையும் தயார்செய்து, யுத்தத்துக்குள் தள்ளுவதை முறியடிப்போம்! 

5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 

8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 

10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிர்வோம்! பண ஆதரவளிப்போம்!!


அன்பார்ந்த தமிழீழ மக்களே, உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்படும் தேசங்களே;

தொடர்ந்து வந்த சுமைகளோடு மேலதிகமாக அமெரிக்க இஸ்ரேலிய பாசிசபிற்போக்கு முகாம், ஈரான் நாட்டின் மீது தொடுத்த அநீதியான நாசகார பாசிச ஆக்கிரமிப்பு நிர்மூல யுத்தம் மேலதிக சொல்லொணாச் சுமைகளை, உலக மக்கள் மீது சுமத்திவிட்டுள்ளது. ஈரான் மட்டுமல்ல உலகின் வேறு பல பாகங்களிலும்,நாடுகளிலும், தேசங்களிலும் போர் மூண்டெரிந்தவண்ணம் உள்ளது.புதிய போர்க்களங்கள் திறக்கப்படவுள்ளன.`` மூன்றாம் உலகப் போர்`` பற்றிய பேச்சு சர்வசாதரணமாகிவிட்டது.மட்டுமல்ல அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக ஈரான் போரில் இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், உலக அமைதி, சமாதானம் மீது அக்கறை கொண்டுள்ள மானுடர் மத்தியில் கரிசனைக்குரிய தேடலும், விவாதமும் இடம் பெற்று வருகின்றன.அவர்களது கவலை அதிகரித்து வருகின்றது.

இராணுவ (பாதுகாப்பு) துறையில் நேற்றோ(NATO) பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது.அமெரிக்கா முன்போல் நேற்றேவுடனான உறவைப் பேணுவதற்கு தயாராக இல்லை. ஏனைய ஐரோப்பிய நாடுகள் சில அமெரிக்காவில் தங்கியிராத நேற்றோவை கட்டியமைக்க முயல்கின்றன. பிரான்ஸ், ஐரோப்பாவுக்கு என தனியான ஒரு இராணுவக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்ப நெடுங்காலமாக குரல் எழுப்பிவருகின்றது.

பாதுகாப்புத் துறையில் மட்டுமல்ல, இதர பல்வேறு துறைகளிலும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவுகின்றன. இவை ரம்ப் நிர்வாகத்தின் ஆட்சிக்காலம் வரைக்குமானதா, அல்லது ஒட்டு மொத்த ஏகாதிபத்திய அமைப்பு முறையும் சார்ந்த, அதில் வேர்கொண்டு முழு அமைப்பு முறையையும் உலுக்கி உலுப்புகின்ற பிரச்சனையா என்கிற கேள்வி உள்ளது.

உலகளாவிய பொருளாதார நிலைமையின் ஒட்டுமொத்த அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் இது ஒரு நாடு, ஒரு நாட்டின் ஆட்சி முறை, அதன் அரசுத் தலைவர் அல்லது தலைவி சார்ந்ததாக அல்லாமல் முழு அமைப்பும் சார்ந்ததாகவே உள்ளது.

உதாரணத்துக்கு-மிகச் சிறந்த உதாரணம்- நேற்றோவை எடுத்துக்கொண்டால் நாட்டுக்கு நாடு வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், அனைத்து நாடுகளிலும் படைத்துறைச் செலவினம் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்து, தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

இதன் தனிக்குறிப்பான தன்மை, இந்த இராணுவச் செலவினமும் ஆயுதப் பெருக்கமும், நவீன மயமாக்கலும் தனி ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு பன்மடங்கு அதிகமான, அவசியத்துக்கும் அப்பாற்பட்ட அதிகரித்த தயாரிப்புகளாக இருப்பதாகும்.

இலங்கை போன்ற சின்னஞ்சிறிய நாட்டிலும், கிரீன்லாண்ட் போன்ற மிகச் சிறிய சனத்தொகை கொண்ட தீவிலும் இதனைத் தெளிவாகக் காணமுடியும்.

மேலும் எழுந்து வரும் ரசிய சீன ஏகாதிபத்தியவாதிகள், இறுதியாக அமெரிக்கவுடனான ஒரு போருக்காகவே தம்மை தயார் செய்து வருகின்றனர்.

போதாததற்கு பிராந்தியம் பிராந்தியமாக வலிமைகொண்ட விரிவாதிக்க அரசுகளும், அசுர இராணுவ வலிமையைக் கட்டமைப்பதும், தமக்கிடையே கூட்டமைப்பதும் ஒரு போக்காகிவிட்டது!

இவ்வாறாகத்தானே மூன்றாம் உலகப் போர் என்பது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுவிட்டது.

`` ஏகாதிபத்தியம் என்றால் போர்`` என்ற மாமேதை லெனின் மார்க்சிய மதிப்பீடு உண்மை என்பது வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகிவிட்டது.

உலகப் போர் என்பது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுவிட்டது, என்பதின் பொருள் மூன்றாம் உலகப் போர் முழு அளவில் ஆரம்பித்துவிட்டது என்ற பொருளில் அல்ல,மாறாக அதை நோக்கிய இராணுவப் பயணம் ஆரம்பித்துவிட்டது என்கிற பொருளிலேயே ஆகும்.

ஏகாதிபத்தியம் ஏன் போரை நாடுகின்றது?

வசதி கருதியும், தற்காலத்துக்கு சமாந்தரமானதுமான ஒரு காலப்பகுதியான சுமார் ஒரு நூற்றாண்டுக்கு சற்று மேற்பட்ட முதல் உலகப் போர் முதலான காலத்தை எடுத்துக் கொண்டால் மட்டும் கூட `எண்ணற்ற` போர்களை எண்ண முடியும்!

எனவே போர்கள் இருந்து வருகின்றது, தொடர்ந்தும் இருந்து வரும். வர்க்க சமுதாயம் உள்ள வரையில், வர்க்கப் பகைமை இணக்கம் காணா நிலையை எட்டும் வேளைகளில் எல்லாம் போர் மூளும், நிகழும், தொடரும்.ஒரு சில மோசமான முல்லாக்கள் மற்றும் பயங்கரவாதிகளினதோ, அல்லது சுதந்திர உலகின் ஒப்பற்ற தலைவர்களினதோ கர்ப்பத்தில் இருந்து போர் பிரசவிப்பது கிடையாது.மாறாக அது புறவய உலகின் சமூக வர்க்க முரண்பாடுகளின் இணக்கம் காணவியலா பகைமையின் அவசியத்தில் இருந்து எழுகின்றது.

இதனால் போரை ஆய்வு செய்வதானால் இந்த அவசியத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.

என்றும் எமக்கு முன்னுதாரணமான மா மேதை லெனின் முதல் உலகப் போரின் குறிபொருள் குறித்து கூறியதாவது:  

  ``அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளும் பல பத்தாண்டுகளாக ஆயத்தம் செய்துவந்த ஐரோப்பியப் போர் மூண்டுவிட்டது. ஆயுத தளவாடங்களின் பெருக்கம், முன்னேறிய நாடுகளில் முதலாளித்துவ  வளர்ச்சியின் அதி உயர் கட்டமான ஏகாதிபத்தியக் கட்டத்தில் சந்தைகளுக்கான போராட்டம் தீவிரமடைதல், மற்றும் அதிகம் பிற்பட்டதான கிழக்கு ஐரோப்பிய முடியாட்சிகளின் அரசவம்சங்களின் நலன்கள் ஆகியவை இந்தப் போரைத் தவிர்க்க முடியாத வகையில் கட்டாயம் ஏற்படுத்தியே தீரும்,அவ்வாறு ஏற்படுத்தியுள்ளன.

 பிரதேசங்களைக் கவர்ந்து பறித்தல், பிறதேசங்களை அடிபணிய வைத்தல், போட்டியிடும் தேசங்களை நாசப்படுத்தல், அவற்றின் செல்வங்களைச் சூறையாடுதல், ரசியா,ஜேர்மனி,பிரிட்டன் மற்றும் இதர நாடுகளின் உள்நாட்டு  நெருக்கடிகளில் இருந்து உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புதல், தொழிலாளர் ஒற்றுமையைக் குலைத்து தேசிய வாதம் மூலம் அவர்களைப் பயனற்றவர்களாக்குதல், பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தைப்  பலவீனப்படுத்த அவர்களது முன்னணிப் படையை அழித்தொழித்தல்- இவையே தற்போதைய போரின் ஒரே மெய்யான சாராம்சம் மற்றும் குறிபொருள் ஆகும். ``

போரும் ரசிய சமூக ஜனநாயகமும்-லெனின்

இத்தகைய ஒரு சமுதாய அவசியம் இன்று தயாரிப்பு நிலையில் இருக்கும் மூன்றாம் உலகப்போருக்கும் உண்டு. அந்த முன் நிபந்தனைகள் தான் இன்றைய போர்த் தயாரிப்புகளைத் தூண்டும் சமூக சக்தி ஆகும்.

முதல் உலகப் போரின் குறி பொருள் குறித்த லெனின் வரையறை பொதுக் கோட்பாடுகள் என்ற வகையில் இன்றைய நிலைமைகளுக்கும் பொருந்தும். ஆனால் குறிப்பான தன்மைகள் வேறானவை, தனி விசேசமானவை, அவை இன்றைய குறிப்பான புறச் சூழலில் இருந்து, ஆய்ந்து அறியப்படவேண்டியவை. இதனை நிகழ்ச்சிப் போக்குகளை பின் தொடர்ந்து சென்று, கை நாடி பிடித்துத்தான் கண்டறியமுடியும். அந்தப் பருண்மையான ஆய்வில் இருந்துதான் நமது `அரசியல் இராணுவ போர்த் தந்திரம், மற்றும் செயல் தந்திரங்களை வகுத்துக்கொள்ள முடியும்.

அதுவே இன்றைய மே நாளில் நாம் தேர்ந்து கொள்ளும் தத்துவார்த்த பணியாகும்.

எமது நடைமுறைப் பணி என்ன?

முதலாவதாகவும்,முதன்மையாகவும் நமது நடைமுறைப் பணி என்னவென்றால் இந்த நாசகார மனிதப் பேரழிவுப் போர் முழு அளவில் ஒரு உலகப் போராக வெடிப்பதைத் தடுப்பதாகும்.எமது அரசியல் பிரச்சாரப் பணி அனைத்தும் இந்த ஒற்றைக் குறிக்கோள் மீது குவிக்கப்படவேண்டும்.

உலகப் போர் நிலைமை குறித்த ஒரு பொதுச் சித்திரம்.

1) அமெரிக்காவின் தனி உலக மேலாதிக்க ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பு தகர்ந்து, ரசிய சீன நாடுகள் போட்டி ஏகாதிபத்திய நாடுகளாக எழுந்து, ஏகபோகத்துக்காகப் போரிடும் ஒரு பல்துருவ உலக ஒழுங்கமைப்பு உலகில் உருவாகியுள்ளது.

2) அமெரிக்காவினதும் இதர ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளினதும் ஆளும் வர்க்கங்களுக்குள் ஒரு புதிய அணி உருவாகிவருகின்றது. இது கடந்த பத்து அல்லது இருபது குறுகிய அண்மைய காலத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் விளைவாகவும், அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் இருந்தும் எழுந்து வந்திருக்கும் புதிய ஒரு நிகழ்வாகும். அமெரிக்காவில் இது முன்னைய ஆளும் கும்பல்களைக்காட்டிலும் ஆகப் பிற்போக்கானதும், ஆகப் பாசிசத் தன்மை மிக்கதும், ஆக ஒழுங்கு முறை கட்டுப்பாடு அற்றதும், ஆக ஒழுக்கம் கெட்டதுமான கொலைபாதக காட்டுமிராண்டிக் கும்பலாக உள்ளது. இது தான் போர்த்தயாரிப்புகளை முன்னின்று நடந்துகின்றது.முந்தி உந்தி தள்ளுகின்றது.

3) இரண்டாம் உலகப் போரை அடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாண்மையின் கீழ் இதர ஏகாதிபத்தியவாதிகள் இணைந்து மற்றும் அடிபணிந்து உருவாக்கிய அனைத்து ஒழுங்கமைப்பையும் ,இக் கும்பல் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்றது.இதற்கு மாற்றாக கடவுளுக்கு ஈடான ஒரு மன்னனையும், அவனைச் சூழ்ந்த ஒரு ஆயுதமேந்திய அப்போஸ்தலர் (apostle) சபையையும் கொண்டு உலகை கட்டியாள திட்டமிடுகின்றது.இதனை பாசிச வன்முறையின் மூலம் மட்டுமே சாதிக்க இயலும் என்பதால் போர் பொதுவிதியாக மாறிவருகின்றது.

4) இது ஏகாதிபத்திய முகாமுக்குள்ளும், அணிகளுக்குள்ளும் முரண்பாடுகளைத் தோற்றுவித்து தீவிரப்படுத்துகின்றது.

5) எனினும் உலகப் போர் விடயத்தில், ``அனைத்து நாடுகளின் அரசாங்கங்களும், முதலாளித்துவக் கட்சிகளும்`` அந்தக் கம்பத்தைச் சுற்றியே வட்டமிடுகின்றன.ஏனெனில் இவை அனைத்தும் அந்த நிதிமூலதனக் கம்பத்துடன் கட்டுண்டுள்ளன.எனவே அவர்கள் அனைவரும் ஒருங்கு சேர இந்த `` ஆயத்தத்தில்`` ஈடுபட்டுவருகின்றன.முரண்பாடு என்பது  இதற்கு உட்பட்டதே ஆகும்.இதுவரையில்!

6) குறிப்பாக தொடர் காலனிய நாடுகளின் முதலாளித்துவ பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களும்,கட்சிகளும், அரசாங்கங்களும் தாம் சேரும் அணியின் வெற்றிக்காக உள்நாட்டு உழைக்கும் மக்களைப் பலிக்கடாக்களாக்க தயாராகிவருகின்றன.

7) இப்போர்த் தயாரிப்பு முயற்சிகள் தேசியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்துகின்றன.இதனால் தேசங்களின் சுயநிர்ணய உரிமை பாட்டாளிவர்க்கம் உயர்த்திப் பிடிக்கவேண்டிய தவிர்க்க இயலாத ஜனநாயகக் கோரிக்கையாகவுள்ளது.

8) மேலும் ஒரு நாட்டுக்குள் ஒடுக்கப்படும் ஒரு தேசம் ( உ+ம் இலங்கையில் ஈழம்) மட்டுமல்ல, அதிகாரபூர்வ அந்த நாடே கூட ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியவைக்க அரசியல் இரணுவத் தலையீடுகள் கூர்மையடைகின்றன.(உ+ம் ஈரான்). அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் (அவர்கள் எவ்வளவுதான் பிற்போக்கானவர்களாக இருந்தாலும்) ஆட்சியதிகார உரிமை-இறையாண்மை-அச்சுறுத்தப்படுகின்றது, அல்லது பலவந்தமாகப் பறிக்கப்படுகின்றது.இத்தகைய சூழலில் அந்நாடு போராடும் ``தாய் நாட்டின் தற்காப்பை`` ஆதரிப்பது ஜனநாயகக் கடமையாகும்.   

இன்றைய உலகச் சூழலில் இந்தியா.

இந்தியா நிலப்பரப்பாலும் சனத்தொகையாலும் ஒரு பரந்த நாடு.ஆசியக் கண்டத்தில் ஒரு முக்கிய நாடு.இவை போன்ற காரணங்களால் இந்திய ஆளும் வர்க்கத்தின் பேர ஆற்றல் மிகவும் வலுவானதாகும். இரட்டைத்துருவ உலக ஒழுங்கு நிலவிய காலத்தில் கூட இந்தியா ஒரு புறம் அமெரிக்க பிரித்தானிய உறவையும், மறுபுறம் சோவியத் ஜூனியனுடனான உறவையும் அக்கம் பக்கமாக பேணிவந்தது.இப்போதும் அப்படியே நடந்துகொள்கிறது,இந்த சா-நக்கி-யத்தில் இந்தியா பேர் போனது, புகழ் பூத்தது.

உக்ரைன் போரில் தாம் நடுநிலை வகிக்கவில்லை, சமாதானத்தின் பக்கம் நிற்பதாகக் கூறுகின்றது.மறுபுறம் இஸ்ரேலோடு `அண்ணன் தம்பி` உறவு கொண்டாடி, கட்டியணைத்து முத்தமிட்டு, பாலஸ்தீனத்தைக் காட்டிக்கொடுக்கின்றது. அமெரிக்காவுடன் ஐரோப்பா மற்றும் ரசியா கொண்டுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தி தன்னை வளர்த்துவருகின்றது. உடனடியாக பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராகவும், தொலைநோக்கில் உலகப்போர்த் தயாரிப்புக்காகவும் பாரிய அளவில் படைப் பெருக்கம் செய்துவருகின்றது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரானுக்கு எதிராக கட்டவிழ்த்த நாசகார பாசிச ஆக்கிரமிப்பு யுத்தத்தில் இந்தியா எடுத்த நிலை வெட்கக் கேடானது. நிராயுதபாணிகளான தனது சொந்த விருந்தினரை அமெரிக்கா படுகொலை செய்ய காரணமாக இருந்தது இந்தியா. ஒரு கண்டனம் தெரிவிக்கக் கூட வக்கற்றுக் கிடந்தது.ஒரு பல்லிமுட்டை அளவு நாடு சிறீ லங்காவுக்கு இருந்த தைரியம் கூட இந்த அகண்ட பாரதத்துக்கு இருக்கவில்லை.இதன் மூலம் இந்தியா தன்னை மட்டுமல்ல BRIC அமைப்பையும் அவமானத்துக்கு உள்ளாக்கியது.

இவையெல்லாம் `இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தந்திரக் கூட்டாளி இந்தியா` என்ற உறவு நிலை இன்றும் தொடருவதையே காட்டுகின்றது. திருவாளர் டொனால்ட்டுடன் உடன் இந்தியாவுக்குள்ள சச்சரவு வர்த்தகம் மற்றும் உடல் நலம் சார்ந்தது!

இலங்கை எதிர்நோக்கும் அபாயம்:

1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் இப்போதும் அமுலில் உள்ளது. தற்காலிக வட கிழக்கு மாகாண இணைப்பை வழக்காடி தகர்த்த செஞ்சட்டை வீரம், ஒப்பந்தத்தை அப்படியே வைத்துள்ளது.ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்கள விவசாய இளம் சந்ததியை பலிகொடுத்துவிட்டு IPKF நினைவு மண்டபத்துக்கு காவல் காத்துவருகின்றது ஜே.வி.பி. பிக்கு முன்னணி அனுரா ஆட்சி. மறுபுறம் SOFA ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா நேரடியாகவே மிரட்டி தலையீடு செய்கின்றது. அநியாய IMF கடனில் ஜே.ஆர், ரணில் கடைப்பிடித்த அதே நிதிமூலதன அடிமைப்பாதையில் நாட்டை `` மீட்டு`` வருகின்றது அனுரா அரசு!

ஈரான் போர் நிரந்தரமாக ஓயாது.பெப்ரவரி 28, 2026 இற்கு முந்திய நிலைக்கு இனி உலகமோ, மேற்கு ஆசியாவோ திரும்பாது.மேற்காசிய மறுபங்கீட்டுப் போருக்கு டியாகோ காசியா இராணுவத்தளம் எந்தளவு முக்கியமோ, அதே அளவுக்கு ஈழ-திருமலைத் துறைமுகமும் முக்கியமானதாகும்.

இங்கே அமெரிக்காவும் இந்தியாவும் கூட்டாக முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும். கொத்திக் கலைக்கப்படுவது இலங்கை மக்களாக இருக்கும்.

இத்தகைய அபாயத்தில் இருந்து இலங்கையையும், உலகத்தையும் பாதுகாக்க மீண்டும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் செயலுக்கு அறைகூவல் விடுக்கின்றோம். 

1) உலக யுத்த மறு பங்கீடு மூலம் நெருக்கடிக்குத் தீர்வுகாண முயலும் போர் முனைப்புகளை முறியடிப்போம்!

2) நேற்றோ படை விரிவாக்கம், ஐரோப்பிய படை உருவாக்கம், இராணுவச் செலவின அதிகரிப்பு மற்றும் படைப்பெருக்கம் ஆகியவற்றை எதிர்ப்போம்!

உலகெங்கும் வியாபித்துள்ள  அமெரிக்கப் படைத்தளங்களைக் கலைக்க போராடுவோம்!

3) உலகளாவிய ஏகாதிபத்திய,பாசிச எதிர்ப்பியக்கத்துடன் ஒன்றிணைவோம்!

4) ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான பிராந்திய விரிவாதிக்க அரசுகள், உலகப் போருக்கு அண்டை அயல் நாடுகளை தயார் செய்வதை முறியடிப்போம்! 

5) இணைக்கப்படாத இந்திய மாநிலமாக இலங்கையை தாரை வார்த்துவிட்ட ஜே.வி.பி-பிக்கு முன்னணி ஆட்சியைத் தூக்கியெறிவோம்!

6) தேர்தற் பாதையை நிராகரிப்போம், புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

7) ஆறாவது திருத்தம், பயங்கரவாதச் சட்டம், மற்றும் பாசிசக் கறுப்புச் சட்டங்களை நிராகரிப்போம்! 

8) ஈழப்பிரிவினைப் பொதுவாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

9) ஒடுக்கும் சிங்கள தேசத்தின், தேசிய ஜனநாயகப் போராட்டங்களோடு ஒன்றுபடுவோம்! 

10) ENB இணையம் (enbweb.co), படிப்போம்-பகிருவோம்! பண ஆதரவளிப்போம்!!

புரட்சிப் பாதையில் புதிய ஈழ விடுதலையை வென்றெடுப்போம்!

புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!!

இறுதி வெற்றி உழைக்கும் ஈழமக்களுக்கே!!!

புதிய ஈழப் புரட்சியாளர்கள். ඊලම් නව බෝල්ෂෙවික්වරු Eelam New Bolsheviks (ENB)



ஒத்தவை: