நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

ஈழச் சோனகர் ஈனச் சுத்திகரிப்பு- கறுப்பு ஒக்ரோபர் நினைவாக.


ஈழச் சோனகர் ஈனச் சுத்திகரிப்பு நினைவாக.

இன்று கறுப்பு ஒக்ரோபர் -ஈழச் சோனகர் சுத்திகரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவாகும்.

கறுப்பு ஒக்ரோபர் 1990 இல் ஈழச் சோனகருக்கு நடந்தது என்ன? 

இலங்கை-வடமாகாணத்தை சந்ததி சந்ததியாக தமது நிலையான வாழ்விடமாகவும், அங்கு தமக்கான -விவசாயம், மீன்பிடி, வணிகம், சிறு கைத்தொழில், அரசாங்க நிர்வாக சேவை,ஆசிரியத் தொழில் போன்ற பொருளுற்பத்தி,மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், பொதுவான வாழ்வுப் பிரதேசத்தை-நில உரிமையாகக் கொண்டும், தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகவும், சோனகர் என்ற சமூக அடையாளத்தையும், இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற மத அடையாளத்தையும் கொண்டு இலங்கையின் இதர சமூகப் பிரிவினருக்கு ஈடான கால நீட்சியையும் கொண்ட நிலையான சமூகத்தினர், இவை அனைத்தில்  இருந்தும் பிய்த்துப்பிடுங்கி பெயர்த்து எடுக்கப்பட்டு, ஒட்டுமொத்த சமூகமும் ஒரே திரளாக வேரறுத்து வீசப்பட்டது.

இது வெறும் வெளியேற்றம் அல்ல இது ஒரு வேரறுப்பு.

இவ்வாறு வேரறுத்து எறியப்பட்டோர் சுமார் 75 ஆயிரம் பேரென கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈனச் சுத்திகரிப்புக்கு வடமாகாணம் முழுவதிலும் எடுத்த காலம் ஆக ( ஒக்ரோபர் 15 முதல், 30 வரை) இரண்டு வாரம்! 

சராசரியாக 24 மணி நேரத்தில் 7500 பேர், தமது பூர்வீகத்தை மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பியிருக்க வேண்டும்!

இவர்கள் சாமானிய உழைக்கும் மக்கள்.மிகப் பெரும்பாலானோர் ஏழை எளிய அன்றாட நாட்கூலிகள்.உள்நாட்டிலும் (புத்தளம்), வெளி நாடுகளிலும் (கனடா) என புது மண்ணில் போய் விழுந்தனர்.

பள்ளிவாயில்கள், கல்விச் சாலைகள் உட்பட தமது தேட்டத்தையெல்லாம் காவு கொடுத்து விட்டு, நிலத்தை இழந்து, உழவு இயந்திரங்கள், குழாய்க் கிணறுகள், கசாப்புக் கடைக் கத்திகள், வாள்கள், தையல் எந்திரங்கள்,வலைகள், படகுகள், பேக்கரிகள் என உற்பத்திக் கருவிகள், தொழில்கள் அனைத்தையும் தாரை வார்த்த தாங்கொணாத் துயரத்தோடு, கணியன் பூங்குன்றநாரை வியந்தபடி வெறுங்கைகளை மட்டும் நம்பி புது வாழ்க்கையைத் தொடங்க-தொடங்க, நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

37 ஆண்டுகளாகியும் இவர்கள் இன்னும் பழைய சமூக இருப்பை எட்டவில்லை.உள் நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக சிதறுண்டு சின்னா பின்னமாகிப் போயுள்ளனர்.

இலங்கையர் கட்சிகளும், இஸ்லாமிய கட்சிகளும், தமிழ் பேசும் கட்சிகளும் தமது வயிறு வளர்த்துக் கொண்டனர்.

அரக்களைய, அமைப்பு மாற்ற அரசாங்கம் அடுத்த சுற்றிற்கு ஆயத்தமாக சட்டமியற்றிவருகின்றது.

நாடாளமன்றம் எப்போதும் போல பாசிசத்திற்கு படியமைக்கின்றது.

இவ் வரலாற்றுப் பழி குறித்த விபரத் தொகுப்பில், மறைந்த டி.பி.எஸ்.ஜெயராஜ்  அவர்களின் சிறந்ததொரு கட்டுரையை இங்கே ( கறுப்பு ஒக்ரோபர் 1990 இல் ஈழச் சோனகருக்கு நடந்தது என்ன?) அழுத்திப் படிக்க முடியும்.

1) எதற்காக இந்த பழி நேர்ந்தது என்பதற்கு இன்றுவரையும் எந்த நம்பத் தகுந்த விளக்கமும் இல்லை.விசாரணையும் இல்லை.விமர்சனமும் இல்லை.

2) அதற்காக இதுவரையில் எவரும் அந்தச் சமூகத்திடம் ஒரு பொது மன்னிப்பு கோரியதில்லை, அதற்கு தயாராகவும் இல்லை. ஓரு வேளை இதை `` இன்பியல்`` என்று கருதியிருப்பார்களோ!

நிற்க.

இந்தப் பழி ஒரு முடிந்த கதையல்ல.

2009 இற்குப் பிந்திய போக்கும், அண்மைய நிகழ்வுகளும் இதை உறுதி செய்கின்றன.

1990 ஈனச் சுத்திகரிப்புக்கு காரணமான `சமூகப் பகைமை` இன்றும் பசுமரத்தாணிபோல் உள்ளது.

மேலும் குறிப்பிட்ட இரு மத சமூகங்களுக்கு இடையிலானதாக மட்டுமல்லாமல், குறுக்கும் நெடுக்குமாக, ஒன்றோடு ஒன்றாக எல்லாமும் மோதிக்கொள்வதற்கான திட்டமிடல் தெளிவாகத் தென்படுகின்றது.

குட்டையைக் குழப்புவதற்கான புறவய அவசியம் தாராளமாகவே உள்ளது.

இவ்வாறு வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பரிமாணங்களில் மத முரண்பாடு திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. பாரதூரமான திசை நோக்கிப் பயணிக்கின்றது.

பாதகம் செய்ய பாரதம் இருக்கின்றத

இதைத் தடுத்து நிறுத்தவேண்டும், தவறினால் இலங்கையில் ஒரு இராமாயணத் தீ மீண்டும் மூளும்.  

இந்த ஆராய்ச்சியை-கறுப்பு ஒக்ரோபர் 1990 கோர நிகழ்விற்கு ஈழ மற்றும் இலங்கைச் சோனக சகோதர சமூகத்தினரிடமும், உலகளாவிய இஸ்லாமிய மக்களிடமும், போராடும் மக்கள், நாடுகள், அமைப்புகளிடமும் பொது மன்னிப்புக் கோரி ஆரம்பிக்கின்றோம்.

தமிழ் இனத்துவமும் இஸ்லாமிய விரோதமும்

தொடரும்:

புதிய ஈழப் புரட்சியாளர்- Eelam New Bolsheviks-ENB

29-10-2026

ஒத்தவை: