நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

மலையக சமூக ஆய்வு மையம் - ஜோதிக்கு அஞ்சலி!


`காந்தியம்` அமைப்பின் மலையக குடியேற்றத்  திட்டப் பணிகளில் முன்னின்று செயற்பட்டவர் யோதிலிங்கம்

மலையக சமூக ஆய்வு மையம்-10/10/2026

தமிழர்களின் தணியாத அரசியல் தாகத்தோடு அதன் தீவிர  அரசியல் செயற்பாட்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அரசியல் ஆய்வாளர் திரு.சி.அ. யோதிலிங்கம் அவர்களின் திடீர் மறைவு வடக்கு -கிழக்கிற்கு வெளியில் மலையகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் தமிழ் தேசிய உணர்வாளர்களை   கவலைக்குள் தள்ளி பெரும் அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது. 

மலையக சமூக ஆய்வு மையத்தை பொருத்தவரையில் இவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.

மலையகத் தமிழர்கள் இன்னுமொரு தேசிய இனமாக வளர்வதை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.இதனால் அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் இன அழிப்பு செய்ததோடு குறிப்பாக 1970களில் அவர்கள் மீது பொருளாதார சுமை ஏற்றி தோட்டங்களை அரசுடைமையாக்குதல் எனும் போர்வையில் சூறையாடி சிங்கள குடியேற்றங்களையும்  உருவாக்கியதோடு தோட்டங்களை சிங்கள பௌத்த நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். 

பிற்காலத்தில் மலையகத் தமிழர்களின் வாழ்வு சிதைவுக்கு உட்படுத்துவதை பொறுத்துக் கொள்ளாத வவுனியாவில் இயங்கிய காந்திய  இயக்கம் மலையத் தமிழர்களை வடக்கு-கிழக்கிலே குடியேற்றுவதற்கான திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்திய போது அச்செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டவர் நண்பர் யோதிலிங்கம் அவர்கள். அன்றைய காலத்தில் மலையகத் தமிழர்களுக்கான பாதுகாப்பு பூமியாக வடக்கு கிழக்கே உரியது என அவர்கள்  தீர்மானித்ததின் விளைவு அது.

இவ் அரசியல் சிந்தனை நின்று தம்மை விடுவித்து சுதாகரித்துக் கொண்டவர் மலையகத் தமிழர்களுக்கு மலையகமே பாதுகாப்பு.அதுவே அவர்களின் தாயகம். அவர்களும் இந்நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனம். அவர்களின் தேசமும் தேசிய அடையாளங்களும்ம் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கருத்தியலை தனக்குள் உருவாக்கி அதனை மக்கள் மையப்படுத்தி உழைத்த பெருந்தகையே நண்பர் /ஆசான் யோதிலிங்கம் ஆவார்.

அக்கருத்தியலோடு மலையகத்தில் பயணிக்கக் கூடிய அரசியல் உறவுகளை அடையாளம் கண்டு அரசியல் ஒளி காட்டியதோடு ஒரு கட்டமைப்பாக இயங்கிட அரசியல் இயக்க வழிகாட்டியவர், அறுவை சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு செல்லும் வரை மலையக அரசியலுக்கு திசைக்காட்டியாகவும் உயர்ந்தது நின்றார் என்றால் மிகையாகாது 

மலையக சமூக ஆய்வு மையம் கடந்த வாரம் (03-10-2926) இறுதியாக நிகழ்த்திய அரசியல் கற்கை நிகழ்வில் சுகயீனத்தோடு நண்பர் யோதிலிங்கமும்  கலந்து கோண்டதோடு "நீங்கள் உரையாடுங்கள். நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்"என அமைதியை கடைப்பிடித்து எம்மோடு பயணித்தவர் நிரந்தர அமைதிக்கு சென்றமையை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

ஐயா அவர்கள் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக மக்களை தெளிவூட்டவும் அவர்களை செயற்பாட்டு அரசியலுக்குள் இழுத்து வரவும் அரசியல் சிந்தனை எனும் நூல் வரிசையை வெளியிட்டு மக்களிடத்திலே கொண்டு சென்ற போது மலையகத் தமிழர்கள் சார்பாகவும் கட்டுரைகளை எழுதி, உரையாடுகளை நடத்தி,மலையக மண்ணின்  மக்களோடு மக்களாக நின்றதை எம்மால் மறக்க முடியாது. அரசியல் பிரச்சினை நூல் வரிசையில் "மோடியின் இலங்கை பயணமும் மலையகமும், மலையக மக்களின் அடையாளம் எது?, மலையக அரசியல் வரலாற்று வளர்ச்சியில் முன் நகர்த்த வேண்டிய பணிகளும்" என நூல் வெளியிட்டவர் இறுதியில் "மலையகம் வடக்கு கிழக்கும்"எனும் நூல் வெளியிட்டு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரதிநிதியாக தனது உறவு தாகத்தை வெளிப்படுத்தி உள்ளமை அவரது அரசியல் செல் நெறியை வெளிப்படுத்துகின்றது.       

நண்பர் யோதிலிங்கம் அவர்கள் எப்போதும் தனது உரையாடல்களின் போது நேச ,சேமிப்பு சக்திகள், மாற்று முற்போக்கு சக்திகள், அயலக உறவு சக்திகள், புலம் பெயர்ந்தோர் என அனைத்து தரப்பினரையும் இணைத்து அரசியல் இலக்கு நோக்கி கூட்டு பயணம் மேற்கொள்ள வேண்டும் வற்புறுத்தினார்.     

அதுமட்டுமல்ல  “மலையகத் தேசம் “ சார்ந்து மலையக தமிழர்களுக்கான அரசியல் வழி வரைபடத்தை எம்மோடு சேர்ந்து வரைந்து நிறைவு செய்ததையும் எம்மால் மறக்க முடியாது.

சிங்கள பௌத்த பேரினவாதம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையும், மலையகத் தமிழர்களின் தேசிய அடையாளங்களையும் அழித்தொழிப்பதற்கான தீவிரமான திட்டத்தை தயாரித்து செயற்படுத்துகையில்; வடக்கு கிழக்கு மக்களாகவும், மலையகத் தமிழர்களாகவும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களாக எம் தனித்துவம் காத்து கூட்டுப்  பயணத்திற்கான செயற்பாட்டு அரசியலை தொடர்வதன் மூலமே எம்மை விட்டுப் பிரிந்த அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம் அவர்களுக்கு முழுமையான வாழ்நாள் அஞ்சலியை செலுத்த முடியும். அத்தகைய அஞ்சலியோடு வாழ்வை வாழ்வாக்கிட பயணிப்போம்.

மக்களின் அரசியல் கெளரவ மரியாதையோடு புகழ் அஞ்சலி 

மலையக சமூக ஆய்வு மையம் 

10.10.2026

ஒத்தவை: