'போர் நிலத்துப் பெண்'-நூல் வெளியீடு
ஒரு குழந்தை ஒன்றரை வயதில் தாயை இழந்தது. இரண்டு வயதில் இடம்பெயர்ந்து ஊரையே விட்டுச் சென்றது. ஒன்பது வயதில் தந்தையையும் இழந்தது. யாருமற்ற நிலையில் 'செஞ்சோலை'யில் வளர்ந்தது.
அதுவே அதனுடைய மகிழ்ச்சிக்காலம்.
செஞ்சோலையில் வளர்ந்து பிராயமடைந்தவள், தன்விருப்பில் அங்கிருந்து புறப்பட்டுப் போராளியாகினாள். நிழல் போலவே தொடர்ந்த துயரம் மீண்டும் அவளைச் சுற்றி வளைத்தது. போர்க்களத்தில் இரண்டு கண்களின் பார்வையையும் காலொன்றையும் இழந்தாள். அவளின் உடலும் சிதைந்தது.
நீண்ட கால நினைவிழப்பிலிருந்து மீண்டவளுக்கு தனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை... மெல்ல மெல்ல தன்னுடைய நிலையை அவள் அறிந்தபோது....
ஈழத்தின் விதியைப் போல அவளுடைய வாழ்க்கையும் போரும் அலைவும் துயரும் என நீண்டது.
இறுதிப் போரில் திக்கற்று, திசைகளற்று.. முள்ளிவாய்க்காலில் சிதறிக்கிடந்த பிணங்களில் தடக்குப்பட்டு வீழ்ந்து, கைதவறிப்போன ஊன்று கோலுமின்றி...மீள முடியாமல் மீண்டு வந்தாள்.
அப்படி மீண்டவளின் கதை இது.
இது புனைவல்ல. தன் வரலாறு.
(வேரல் வெளியீடு. தமிழகத்திலும் கிடைக்கும். விரைவில் லண்டனிலும்)
-Sivarasa Karunakaran Face Book
