08.11.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணி
உருவாகவுள்ள தாழமுக்கம், கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு தொடர்பான விழிப்புணர்வு பதிவு
எதிர்வரும் 14.11.2026 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆரம்பத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அடைந்து அதன் பின்னர் வடக்கு நோக்கி இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகர்ந்து தமிழகத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகரும் போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது.
இதனால் இலங்கையின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 15.11.2026 முதல் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 15,16,17 ம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு, தெற்கு, வடமேற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 250 மி.மீ. மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தாழமுக்கம் கிழக்கு மாகாணத்தை நோக்கி நகரும் போது, கிழக்கு, தெற்கு, ஊவா, மேற்கு மாகாணங்களும், இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அண்மித்து வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் போது வடக்கு, கிழக்கு,வட மேற்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சப்ரகமுவா மாகாணங்கள் கனமழையைப் பெறும்.
இப்பருவத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகி இலங்கையை அண்மித்து நகரும் முதல் தாழமுக்கம் இதுவாகும்.
இந்த தாழமுக்கம் காரணமாக:
1) வெள்ள அனர்த்த வாய்ப்புக்கள்,
தற்போது இலங்கை முழுவதும் கீழைக்காற்றின் செல்வாக்கு காரணமாகவும் இலங்கையின் தெற்கே காணப்படும் வளிமண்டல தளம் பல் நிலை காரணமாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 14.11.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 09ம் திகதிக்கு பின் மழை தீவிரமடையும்.
அந்த வகையில் நாளையும்(09.11.2026)நாளை மறுதினமும் (10.11.2026) எதிர்வரும் 11.11.2026 அன்றும் வடக்கு,மத்திய, சப்ரகமுவா, தெற்கு, மேற்கு, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் சில பகுதிகளுக்கு சிறிய அளவிலான வெள்ள அனர்த்த நிகழ்வுகள் ஏற்படக்கூடும்.
இதனால் தற்போது கிடைக்கும் தொடர்ச்சியான மழை காரணமாக எதிர்வரும் 14ம் திகதி அன்று நிலம் முழு ஈரப்பதக் கொள்ளளவை எட்டி விடும். சில இடங்களில் மழைநீர் சில இடங்களில் தேங்கி நிற்கும்.
இத்தகைய சூழலில் எதிர்வரும் 14 அன்று உருவாகவுள்ள தாழமுக்கத்தின் காரணமாக இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே எதிர்வரும் 15,16,17 ம் திகதிகளில் கிழக்கு, வடக்கு, மேற்கு, வட மேற்கு ,மத்திய, தெற்கு, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெள்ள அனர்த்தம் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
2) வேகமான காற்று வீசுகை
இந்த தாழமுக்கம் நகரும்போது இலங்கையின் கிழக்கு கரையோரமாகவே நகரும். இதன்போது இலங்கையின் அம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்கள் தாழமுக்கத்தின் வெளிவளையத்திற்குள் உள்வாங்கப்படும்.
இதனால் அம்பாந்தோட்டை,அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் எதிர்வரும் 15,16,17,18 ம் திகதிகளில் காற்று மணிக்கு 35-50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும். இம்மாவட்டங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று மணிக்கு 25- 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
3) தயார்ப்படுத்தல் செயற்பாடுகள்
1. வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, சப்ரகமுவா, ஊவா, மத்திய, வட மத்திய, வடமேற்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளும், வழமையாக வெள்ளம் நிற்கும் பகுதிகளிலும் எதிர்வரும் 14.11.2026 முதல் 18.11.2026 வரை விசேட அவதானம் செலுத்த வேண்டும். கனமழை மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்களுக்கும் விழிப்பூட்ட வேண்டும்.
2. வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் உள்ளவர்கள், உங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள வேகமான காற்றினால் முறிந்து விழக்கூடிய, அல்லது பாறி விழக்கூடிய மரங்களை அகற்றி அல்லது அவற்றின் விதானங்களின் அளவைக் குறைக்க வேண்டும்.
3. வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, சப்ரகமுவா, மேற்கு, வட மேற்கு, தெற்கு ஊவா மாகாணங்களில் உள்ளவர்கள், உங்கள் பகுதிகளில் கனமழையின் போது சீரான வெள்ள ஓட்டத்தைத் தடை செய்யக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றின் தடைகளை அகற்றுதல்.
4. வேகமான காற்று மற்றும் கனமழையினால் உடைந்து விழக்கூடிய கட்டுமானப் பகுதிகளை அடையாளம் கண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.
5. மத்திய, ஊவா, சப்ரகமுவா, மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் உள்ள மக்கள் எதிர்வரும் 14,15,16,17 ம் திகதிகளில் உள்ள மக்கள் கனமழையோடு கூடிய நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் இருப்பது அவசியம்.
6. எதிர்வரும் 14.11.2026 முதல் 18.11.2026 வரை வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் இக்காலப்பகுதியில் கடலுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
7. தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கிடைக்கும் மழை எதிர்வரும் 10.11.2026 முதல் தீவிரமடையும். எதிர்வரும் 14.11. 2026 அன்று தாழமுக்கம் உருவாகி எதிர்வரும் 18.11.2026 வரை கனமழை கிடைக்கும். எனவே இந்த நாட்களைக் கருத்தில் கொண்டு மழை மற்றும் வேகமான காற்று வீசுகையினால் பாதிக்கப்படக்கூடிய உங்கள் செயற்பாடுகளைத் திட்டமிடுங்கள்.
அன்புக்குரிய உறவுகளே,
இது ஒரு நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு. எதிர்வரும் 14.11.2026 அன்று உருவாகவுள்ள தாழமுக்கம் எத்தகைய பாதிப்புக்களையும் ஏற்படுத்தாமலும் விடலாம். ஆனால் போதுமான விழிப்போடும் தயார்ப்படுத்தலோடும் இருப்பதில் தவறொன்றும் இல்லை. ஏனென்றால் நாம் தயாராக இருந்து அனர்த்தம் நிகழவில்லை என்றால் எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் தயாராக இல்லாமல் இருந்து அனர்த்தம் நிகழ்ந்தால் எமக்கு மீள முடியாத பாதிப்புக்கள் ஏற்படும்.
உருவாகவுள்ள தாழமுக்கம் தொடர்பாகவும் தற்போது கிடைக்கும் பரவலான மழை தொடர்பான விபரங்களும் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
- நாகமுத்து பிரதீபராஜா
