ஊடகச்செயலர் குமணனிடம் ஏழு மணித்தியாலம் விசாரணை!
GTN செய்தியைத் தழுவி ENB August 17, 2025
முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகச்செயலருமான கணபதிப்பிள்ளை குமணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (17) அன்று காலை 9.30 மணிக்கு அவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றார்.
ஊடகச் செயலர் குமணன் |
விசாரணைக்காக அழைக்கப்பட்ட குமணன் சட்டத்தரணி நடராசா காண்டீபனுடன் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் பத்து மணியளவில் ஆரம்பித்த விசாரணை ஏழு மணித்தியாலங்கள் நீடித்தது.
இதன்பின்னணியில் அரசாங்க அமைச்சர் ஒருவர் கிளிநொச்சி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேள்விக்குள்ளானார்.
கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (17.08.25) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால், ஊடகத் துறையினர் இன்றும் விசாரணைக்கு அழைக்கப்படும் சூழ் நிலைகள் தொடர்ந்து நிலவுகிறது. இன்று (17-08) அன்றும் முல்லைத்தீவு ஊடகச்செயலர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமை ஊடகத் துறையினரை அச்சுறுத்தும் செயற்பாடாக காணப்படுகிறது எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்ததாவது;
`` இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதே எமது கட்சியின் அரசியல் எழுச்சியை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவே.எனவே இச் சட்டத்தைப் பற்றி நாம் நன்கு அறிந்துள்ளோம் எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதே எமது அரசின் நோக்கம் எனத் தெரிவித்தார்.நாம் அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” எனப் பதில் அளித்துள்ளார்.
மேலும் “ஊடகவியலாளர் குமணனை விசாரணைக்கு அழைத்தது தனக்குத் தெரியாது” எனவும் கூறியுள்ளார்.