நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

யுத்தம் நிறைவுற படையினர் உயிர்த்தியாகம் செய்தனர்-ஜனாதிபதி


யுத்தம் என்பது ஒரு துயரம், நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு துயரம் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம்

16 ஆவது தேசிய படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 12,434 படையினருக்கு பதவி உயர்வு

மே 19, 2025 ஜனாதிபதி ஊடகப்பிரிவு

16 ஆவது இராணுவ வீரர்கள் நினைவு நிகழ்வில் ஜனாதிபதியின் முழுமையான உரை: 

எமது நாடு பல தசாப்தங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. யுத்தம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை தந்தது. பலவருடங்களின் பின்னர் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்தது. யுத்தத்தை நிறைவு செய்ய உயிர்த்தியாகம் செய்த படையினரை நாம் இன்று நினைவு கூருகிறோம். இது முக்கியமான வரலாற்றுத் தினமாகும். இது யுத்த நிறைவு தினம் மட்டுமன்றி மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதைத் தடுக்க சிங்கள,தமிழ்,முஸ்லிம்,பேர்கர், மலே, கிரிஸ்தவர் என சகல மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர்.

யுத்தத்தை நிறைவு செய்ய எமது படையினர் உயிர்த்தியாகம் செய்தனர். இங்குள்ள நினைவுச் சின்னம் முழுவதும் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தினால் பலர் அங்கவீனமுற்றனர். பலர் தமது உடல் உறுப்புகளை இழந்தனர். அவர்களின் உறவினர்,குடும்பத்தினர் பெரும் தியாகம் செய்தனர்.அவர்களை நாம் தினமும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நாடு கடன் பட்டுள்ளது.

யுத்தம் என்பது பாரிய அழிவாகும். யுத்தத்தில் போராடிய நீங்கள் யுத்தம் எந்தளவு நாசகரமானது என்பதை அறிந்திருப்பீர்கள். யுத்தம் செய்த எவரும் யுத்தத்தை தொடர்ந்து எதிர்பார்த்து போராடவில்லை. அனைவரும் சமாதானத்தை எதிர்பார்த்தே போராடினர். வடக்கு தெற்கு பேதமின்றி பெற்றோரை இழந்த பிள்ளைகள்,பிள்ளைகளை இழந்த பெற்றோர்.கணவரை இழந்த மனைவிமார் உள்ளனர். அவர்கள் கௌரவத்துடன் நினைவுத் தூபியில் தமது உறவினர்களின் பெயர்களைத் தேடுகின்றனர். இங்கு மாத்திரமா வடக்கிலும் இதே நிலைமை தான். தமது பிள்ளைகள்,கணவர்மார்களின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவர்களின் உறவினர்கள் வீதியோரம் ஒப்பாரி வைக்கின்றனர்.

அனைத்து பெற்றோருக்கும் தமது பிள்ளை முக்கியம். பாரிய அழிவை சந்தித்த தாய்நாட்டில் அவ்வாறான யுத்தம் மீள ஏற்படுவதை தடுப்பது எமது பொறுப்பாகும்.எமது சந்ததி சண்டையிட்டது. கோபமும் குரோதமும் பரவியது. ஆனால் எமது பிள்ளைகள் வாழும் இன்றைய சந்ததியினருக்கு யுத்தம் செய்யாத,மோதல் அற்ற,கோபம்,சந்தேகத்திற்குப் பதிலாக நட்புறவு மற்றும் அன்புள்ள நாடு உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த கால சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். மீள அவ்வாறான நிலை எமது தாய்நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது . யுத்தமற்ற, குரோதமோ,சந்தேகமோ அற்ற நாடு உருவாக்கப்பட வேண்டும். மீண்டும் மோதல்,குரோதம் உள்ள நாட்டுக்குப் பதிலாக சமாதானமான நாட்டை உருவாக்குவதே அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.

நாம் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானமான நாட்டையே வழங்க வேண்டும். அதிகாரத்தை பெறவும் பாதுகாக்கவும் யுத்தம்,மோதல் மற்றும் இனவாதத்தை கடந்த காலத்தில் பயன்படுத்தினார்கள். சரத் பொன்சேகா இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தார். அவர் என்ன தவறு செய்தார். அவருடன் நான் அன்று நெருக்கமாக பழகினேன்.

அதிகாரத்தை பலப்படுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்கள் மற்றும் மோதல்களினால் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பிள்ளைகளே பாதிக்கப்பட்டனர். யுத்தத்திற்கு எந்த காரணமும் அற்ற பங்களிக்காத கிராமத்துப் பெற்றோரின் பிள்ளைகளே இறந்தனர். அங்கவீனமுற்றனர். இது தான் அதனால் கிடைத்த அழிவாகும்.

மக்களால் புறக்கணிக்கப்பட்டோருக்கு யுத்தம் என்பது இனிய அனுபவம். நாம் சமாதானத்திற்காக ஒன்றிணைய வேண்டும். ஆனால் இன்று சமாதானம் என்பது காட்டிக்கொடுப்பின் சின்னமாக மாறியுள்ளது. நல்லிணக்கம் என்பது காட்டிக்கொடுப்பாக உள்ளது. யுத்தம் ஒருபோதும் வெற்றியை கொண்டுதருவதில்ல. படைவீரர்களிடமிருக்கும் ஆயுதத்தை பயன்படுத்த தேவையற்ற அமைதியான சமூகம் உருவாக வேண்டும்.

நாம் மனிதாபிமானத்திற்கும் மனிதத்துவத்திற்குமே அடிபணிய வேண்டும். இந்த பூமி போதுமான அளவு இரத்தத்தில் தோய்ந்துள்ளது. பெற்றோரும் உறவினர்களும் அதிகமதிகம் கண்ணீர் சிந்தியுள்ளனர். யுத்தத்தின் வேதனையை அனுபவித்துள்ளோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்படுவதை தடுக்க வேண்டும். அனைவரும் சமாதானத்திற்காகவே ஆயுதம் ஏந்தினார்கள்.

யுத்தத்தின் நிறைவு என்பது சமாதானத்தை நிலைநாட்டுவதாகும். நாம் முழுமையான வெற்றியாளர்களாக மாற சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும். நாம் சமாதானத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயார். நாட்டின் சமாதானத்திற்காகவே படைவீரர்கள் பங்களித்தார்கள். எதிர்காலத்திலும் சமாதானத்திற்காக பங்களிப்பார்கள்.

சமாதானத்தை நிலைநாட்டுவதே இறந்த படைவீரர்களுக்கு செய்யும் கைங்கரியமாகும். இது கடினமான செயற்பாடு. வடக்கிலும் தெற்கிலும் அதிகாரத்திற்காக இனவாதம் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. தாய்நாட்டில் உண்மையான சமாதானம் நிலைநாட்டப்படவில்லை.

மண்சரிவு அபாயம் உள்ள 4900 வீடுகள் உள்ளன. மழை பெய்யும் போது அதில் எங்கு மண்சரிவு ஏற்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது. உலகில் எங்காவது மோதல் நடக்கும் போது எமது பொருளாதாரத்திற்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் தோன்றும்.இத்தகைய நிலையில் இது சுதந்திரமான நாடா? பொருளாதார ரீதியாக வீழ்ந்த நாட்டில் எங்கு இறையாண்மை உள்ளது. பலமான பொருளாதாரமற்ற நாடாக இருக்கிறோம். உலகில் கௌரமான நாடாக உயர பொருளாதார ஸ்தீர நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். குற்றங்கள்,தொற்றுநோய்கள் அற்ற நாடு உருவாக வேண்டும். மோதல்களற்ற குரோதமற்ற நாடு உருவாக வேண்டும். அதன் ஊடாகவே பலமான இறையாண்மை ஏற்படும்.

இந்த தாய் நாட்டை நாம் நேசிக்கிறோம். உலகில் சிறந்த நாடாக மாற்ற சமாதானமும் நல்லிணக்கமும் அவசியம். அதற்கான அனைத்து முடிவுகளையும் தைரியமாக எடுக்க வேண்டும்.படையினர் காட்டிய அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தைரியம் என்பன இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் எங்களுக்கு நம்பிக்கையைத் தரும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்.

16 ஆவது தேசிய படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் 12,434 படையினருக்கு பதவி உயர்வு

16 ஆவது தேசிய படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அங்கீகாரத்துடன், முப்படைகளின் 217 அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகள் 12,217 க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10 093 இதர பதவிகள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 இதர பதவிகள், இலங்கை விமானப்படையின் 09 அதிகாரிகள் மற்றும் 868 ஏனைய பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.☀

ஒத்தவை: