நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

தமிழர் பிரச்சினையைச் சிங்கள மக்களிடம் எடுத்துரைத்த மாமனிதர் ரவிராஜ்!


தமிழர் பிரச்சினையைச் சிங்கள மக்களிடம் எடுத்துரைத்த மாமனிதர் ரவிராஜ்!

பார்த்தீபன்-ஈழம்-10-11-2026

தமிழர் பிரச்சினையைத் தமிழர்களிடம் பேசுவது ஒருபுறம். அந்தப் பிரச்சினையைச் சிங்கள மக்களிடம் எடுத்துச் சென்று, அவர்களின் மொழியில், அவர்களது அரசியல் வெளியில் எடுத்துரைப்பது இன்னொருபுறம். மாமனிதர் நடராஜா ரவிராஜ் இந்த இரண்டாவது பணியையும் தனது அரசியல் வாழ்வின் முக்கியமான பொறுப்பாகக் கொண்டிருந்தார். தமிழர் உரிமைகள், மனித உரிமை மீறல்கள், வடக்கு – கிழக்கின் அரசியல் அபிலாசைகள் குறித்து அவர் சிங்கள மொழியிலும் ஆங்கிலத்திலும் பேசினார். தென்னிலங்கையின் ஊடக விவாதங்களில் தமிழர்களின் அரசியல் குரலாக ஒலித்தார். அந்தக் குரல் கொழும்பின் வீதியில் துப்பாக்கிகளால் ஒடுக்கப்பட்டு இன்றுடன் இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.

யாழ் மாநகர சபையில் முதல்வராக

1962 ஜூன் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த நடராஜா ரவிராஜ், சட்டத்துறையில் கல்வி கற்று 1987ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதிவுசெய்தார். மனித உரிமைகள் இல்லத்தில் பணியாற்றிய அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்ட தமிழ் மக்களுக்காக நீதிமன்றங்களில் வாதாடினார். அவரது சட்டப்பணிகள் நீதிமன்ற அறைகளுக்குள் மட்டும் முடங்கியிருக்கவில்லை. அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார்.

1987ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்த அவர், பின்னர் கட்சியின் மத்திய குழுவிலும் அரசியல் கட்டமைப்புகளிலும் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினராகத் தெரிவானார்.  பின்னர் 2001இல் மாநகர முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். ஒரு சட்டத்தரணியாகவும் மாநகர முதல்வராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் வெவ்வேறு தளங்களில் விரிந்திருந்தன. தென்மராட்சியின் கிராமங்களின் அடிப்படை வசதிகள், வீதிகள், மின்சாரம் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளிலும் அவர் அக்கறை செலுத்தினார்.

தென்னிலங்கையில் ஒலித்த தமிழர் குரல்

மாமனிதர் ரவிராஜின் அரசியல் பணியில் தனித்துவமானது, தமிழர்களின் அரசியல் நியாயங்களைச் சிங்கள மக்களிடம் எடுத்துரைக்க அவர் மேற்கொண்ட முயற்சியாகும். தென்னிலங்கைத் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, சிங்கள மொழியில் தமிழர்களின் பிரச்சினைகளை விளக்கினார். போர், இராணுவ நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து அவர் தொடர்ச்சியாகப் பேசினார். தமிழ் மக்களின் போராட்டத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளும் தென்னிலங்கைச் சமூகத்திடம் அதன் வரலாற்றையும் காரணங்களையும் விளக்குவது அவசியம் எனக் கருதிய அரசியல் அணுகுமுறை அவரிடம் இருந்தது. அவர் சிங்கள மொழியில் பேசி இரண்டு சமூகங்களுக்கிடையிலான அரசியல் இடைவெளியை இல்லாமல் செய்ய அயராது போராடினார். அதுவே அவரை சிங்களப் பேரினவாதமும் அதனுடன் இணைந்த துணை ஆயுதக் குழுவும் இலக்கு வைக்கவும் காரணமாகியது.

2006 நவம்பர் 10ஆம் திகதி காலை, கொழும்பு நாரஹேன்பிட்டிய மனிங்டவுன் பகுதியில் தனது வீட்டிலிருந்து வாகனத்தில் புறப்பட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் ரவிராஜ் சுடப்பட்டார். அன்று காலை தெரண தொலைக்காட்சியின் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியிருந்த அவர், மீண்டும் வெளியேறியபோதே தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். அவருடன் பயணித்த காவல்துறை மெய்ப்பாதுகாவலர் லக்ஷ்மன் லொக்குவெல்லவும் கொல்லப்பட்டார். நாட்டின் காவல்துறைத் தலைமையகத்திற்கு அருகிலேயே இந்தப் படுகொலை இடம்பெற்றது என்பது அன்றைய பாதுகாப்புச் சூழல் குறித்த கேள்விகளையும் எழுப்பியது.  

நீண்ட நெடிய வழக்கு!

இந்தப் படுகொலைக்கான நீதி இருபது ஆண்டுகளாகத் தாமதிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜூரிகள் சபையால் விடுவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரும் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜும் மேன்முறையீடுகளை முன்வைத்தனர். நீண்டகால இடைவெளிக்குப் பின்னர், 2026 மார்ச் 26ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த விடுதலைத் தீர்ப்பை இரத்துச் செய்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. உடந்தைச் சாட்சியின் வாக்குமூலத்தை மதிப்பிடுவது தொடர்பாக ஜூரிகளுக்கு நீதிபதி உரிய வழிகாட்டுதலை வழங்கவில்லை என்பதும், அந்தத் தீர்ப்பில் போதிய சட்டரீதியான குறைபாடுகள் இருந்தமையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தன. இதனால் புதிய விசாரணைக்கான வழி திறந்துள்ளது. எனினும், இதுவரை இந்தப் படுகொலைக்காக எவரும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படவில்லை.  

ரவிராஜின் படுகொலை ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிரைப் பறித்த சம்பவம் மட்டுமல்ல. தமிழர் பிரச்சினைகளைத் தென்னிலங்கையின் அரசியல் உரையாடலுக்குள் கொண்டுசெல்ல முயன்ற ஒரு குரல் கொல்லப்பட்ட சம்பவம். அவர் முன்வைத்த அரசியல் கருத்துகளுடன் ஒருவர் உடன்படலாம் அல்லது முரண்படலாம். ஆனால் ஒரு மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும் அரசியல் குரலைப் படுகொலை செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்தக் கொலைக்குப் பின்னால் இருந்தவர்கள் யார், அதற்கான பொறுப்பு யாரிடம் உள்ளது என்பவை நீதிமன்ற விசாரணையின் ஊடாகத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

நீதியின்றித் தொடர்கின்ற காலம்

இருபது ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இன்னும் நீதியின்றிக் காலம் தொடர்கின்றது. ஈழத் தமிழர்கள்மீதான எல்லா அநீதிகளையும் போலவே. ரவிராஜின் நினைவிடத்தில் மலர்கள் வைக்கப்படுகின்றன. அவரது அரசியல் பணிகளை தலைவர்களும் எம்மை போன்ற ஊடகங்களும் நினைவுகொள்கின்றன. ஆனால் நினைவுகூர்வதைவிட முக்கியமானது, அவருக்கான நீதியை நிலைநாட்டுவதாகும். மீண்டும் தொடங்கப்படவுள்ள வழக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வந்து, குற்றம் நிரூபிக்கப்படுபவர்கள் சட்டத்தின் முன் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டியது அவசியமானது. அது இலங்கையில் நடக்குமா என்பதே கேள்விக் குறியானது.

தமிழர் பிரச்சினையைச் சிங்கள மக்களிடம் எடுத்துரைத்த மாமனிதர் ரவிராஜின் குரல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதேபோலொரு நாளில் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஆனால் இன்றும் தமிழ் மக்கள் அதே பிரச்சினைகளுடன் அதேபோன்ற ஒடுக்குமுறைகளுடன்தான் வாழ்கிறார்கள். ஒரு மனிதனின் குரலைத் துப்பாக்கி தின்றுவிட்டது. ஆனாலும் அவர் எழுப்பிய உரிமைக் கேள்விகள் இன்றும் இனத்தின் கேள்விகளாய் எழுந்தே நிற்கின்றன. ரவிராஜுக்கான நீதி என்பது அரசியல் படுகொலைகளுக்கு எதிராக நடந்த அத்தனை படுகொலைகளுக்குமான நீதியும் பொறுப்புக்கூறலுமாகும்.

ஒத்தவை: