மடு தேவாலயப் படுகொலை:
அடைக்கலம் தேடிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவுகள்!
பார்த்தீபன்-ஈழம்-19-11-2026
போர் முடிவடைந்துவிட்டது என்பதால் போர்க்காலக் குற்றங்களையும் மறந்துவிடுங்கள் என்று ஶ்ரீலங்கா அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. காலம் கடந்து விட்டதால் அன்றைய படுகொலைகளின் செய்திகள் மறைந்துவிடுவதில்லை. எம் நெஞ்சங்களில் பெருத்த வடுவாகத் தங்கியுள்ளன. குழந்தையை இழந்த, தாயை இழந்த குடும்பத்தின் துயரமும், உடல் முழுவதும் காயங்களுடன் உயிர் தப்பியவரின் நினைவும், தேவாலயத்தில் பலியெடுக்கப்பட்ட உயிர்களின் வரலாறும் காலத்தின் முன்னால் குரல் எழுப்பி நிற்கின்றன.
மடு எனும் வடு
மடு மாதா தேவாலயம் அன்றுபோல இன்றும் வழிபாட்டுக்கான புனிதத் தலமாக இலங்கையில் மாத்திரமின்றி உலகத்தாராலும் அறியப்படுகிறது. அதேவேளை, அது ஈழத் தமிழ் மக்களின் இடப்பெயர்வு, போர், பாதுகாப்பற்ற வாழ்வு, பொதுமக்கள் மீதான வன்முறை ஆகியவற்றின் வரலாற்றுச் சாட்சியாகவும் அந்த ஆலயம் நிற்கிறது. அதில் ஒன்றாக மடுதேவாலயப்படுகொலைகளுக்கான நீதி எங்கே? என்ற பெருத்த குரலொன்று வரலாறு முழுவதும் எழுந்து நிற்கிறது.
1999 நவம்பர் 20. அன்றைய நாளில், மடு மாதா தேவாலயத்தை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் கால்கள் நடந்துகொண்டிருந்தன. வீடுகளை இழந்தவர்கள், ஊர்களை இழந்தவர்கள், உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடிவந்தவர்கள் என்று ஆயிரக்கணக்கான மக்கள் அந்தப் புனித வளாகத்தில் தஞ்சமடைந்திருந்தனர். போரின் குண்டுகளிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு அந்த தேவாலயம் அது உயிர் பிழைத்திருப்பதற்கான கடவுளின் நம்பிக்கையின் நோவாப் பேழையாக இருந்தது. ஆனால் அந்த நோவாப் பேழையின் மீதே எறிகணைகள் விழுந்தன.
அகதிகளால் நிரம்பிய பேழை
அன்றிரவு மடு தேவாலய வளாகத்தில் சுமார் மூவாயிரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்தனர். இரவு நேரத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் குழந்தைகள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர். குறைந்தது 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். அறுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. எண்ணிக்கைகளில் வேறுபாடுகள் இருந்தாலும், அங்கு நிகழ்ந்தது
அடைக்கலம் தேடிய பொதுமக்களின் பேரவலத்தை ஏற்படுத்திய ஶ்ரீலங்கா அரசு நவாலியிலும் நந்தாவிலிலும் குற்றவுணர்வுகொள்ளாத்தைப்போலவே இங்கும். உண்மையில் மடு தேவாலயம் என்பது இன, மத வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நம்பிக்கையுடன் சென்று வழிபடுகிற புனிதத் தலம். போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு பாதுகாப்புத் தேடினர். குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் அங்கு இருந்தனர். ஆயுதங்களற்ற அந்த மக்களின் மீது எறிகணைகள் விழுந்தபோது, அவர்கள் எங்குதான் தப்பிச் செல்ல முடியும்?
சர்வதேசத்தின் கவனம்
கடவுளின் தேவாலயத்தின் கூரையும் சுவர்களும்கூட சனங்களைக் கைவிட்டன. அந்த இரவில் மடு தேவாலயம் குருதியால் நனைந்தது. அந்தத் தாக்குதலின் பொறுப்பு தொடர்பாகப் பல்வேறு பதிவுகளும் சாட்சியங்களும் உள்ளன. தாக்குதல் அரச படைகளின் எறிகணை வீச்சினால் நிகழ்ந்ததாக உயிர் தப்பியவர்களின் சாட்சியங்களும் தமிழர் தரப்பின் ஆவணப்படுத்தல்களும் குறிப்பிடுகின்றன. அக்கால ஐ.நா. அறிக்கை மடு தேவாலயப் பகுதியில் கடுமையான மோதல் இடம்பெற்றதாகவும், பொதுமக்கள் அங்கு தஞ்சமடைந்திருந்தமை பதிவு செய்யப்பட்டது. தாக்குதலின் முழுமையான சூழ்நிலைகள் தெளிவுபடுத்தப்படவில்லை என்று பிரித்தானியாவின் 2002ஆம் ஆண்டுக்கான நாட்டுநிலை அறிக்கையும் குறிப்பிட்டது.
மடு தேவாலயப் படுகொலை என்பது தனித்தவொரு சம்பவம் மாத்திரமில்லை. நவாலி தேவாலயத் தாக்குதல், பேசாலை தேவாலயத் தாக்குதல் மற்றும் இந்து இஸ்லாமிய மதத்தலங்கள், எனப் போர் காலத்தில் வழிபாட்டிடங்களும் பாதுகாப்புத் தேடிய மக்களும் தாக்குதல்களுக்கு உள்ளான சம்பவங்கள் பலவும் ஈழத் தமிழ் மக்களின் நினைவில் தொடர்கின்றன. மத வழிபாட்டிடங்கள் பொதுமக்களுக்கான பாதுகாப்பு இடங்களாக மதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை மனிதாபிமானக் கடப்பாடு மீறப்பட்டபோது, அதன் விளைவுகளை அனுபவித்தவர்கள் அப்பாவிப் பொதுமக்களே. அத்துடன் அது வரலாறு முழுவதும் நினைவு வழியாகவும் அவர்களைத் துன்புறுத்துகிறது.
நீதிதான் அஞ்சலி
மடு தேவாலயப் படுகொலையின். உயிரிழந்தவர்களின் பெயர்கள், குடும்பங்களின் வாக்குமூலங்கள், உயிர் தப்பியவர்களின் சாட்சியங்கள், மருத்துவமனைப் பதிவுகள், அக்காலச் செய்தி அறிக்கைகள் என அனைத்தும் முறையாகத் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தாக்குதலின் பொறுப்பைத் தீர்மானிக்கும் வகையில் சர்வதேசத் தரத்திற்கு அமைவான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையும் நீதியும் இழப்பீடும் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மடுவில் கொல்லப்பட்ட ஒவ்வொரு அப்பாவித் தமிழ் பொதுமகனும் ஒவ்வொருவரதும் மரணத்தை நினைவுகூர்வது என்பது ஈழ மண்ணில் அநியாயமாக அழிக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களையும் நினைவுகொள்ளுகின்ற நினைவேந்தலாகும். அவர்களின் உயிருக்கு மதிப்பளிப்பது என்பதும் அவர்களுக்கான நீதியைக் கோருவது என்பதும் மீண்டும் இத்தகைய துயரம் உலகின் எந்த மூலையிலம் நிகழாதிருக்க மனித குலத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாகும்.
