மாவீரர் வாரம் ஆரம்பம்:
நினைவுகளை அழிக்கவும் முடியாது; நினைவேந்தல் உரிமையைப் பறிக்கவும் முடியாது!
பார்த்தீபன்-ஈழம்-21-11-2026
யாழ்ப்பாணம் வேலணைச் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நவம்பர் 20ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நினைவுகூரும் உரிமையை மறுக்க முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன், சாட்டிப் பகுதியில் வழமைபோன்று நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. மாவீரர் வாரம் ஆரம்பமாகும் தருணத்தில் சாட்டி துயிலும் இல்லத்தில் எழுந்த இந்த வழக்கு, தமிழர் நினைவேந்தல் உரிமை இன்னமும் எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.
தயாராகும் தமிழர் தேசம்
இன்று நவம்பர் 21. வடக்கு – கிழக்கு தமிழர் தாயகமெங்கும் மாவீரர் வாரம் ஆரம்பமாகிறது. நவம்பர் 21 முதல் 27 வரை நீளும் இந்த நினைவுக் காலம், நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளில் உச்சத்தை அடைகிறது. வீடுகளிலும் கிராமங்களிலும் துயிலும் இல்லங்களிலும் நினைவுகள் மீண்டும் உயிர்பெறும் காலமிது. போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்காக உறவினர்கள் துயிலும் இல்லங்களை நோக்கிச் செல்கிறார்கள். அழிக்கப்பட்ட கல்லறைகளின் எஞ்சிய அடையாளங்களைத் தேடுகிறார்கள். துப்புரவுப் பணிகளை மேற்கொள்கிறார்கள். விளக்கேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இது ஒரு தலைமுறைகளைக் கடந்து தொடரும் ஒரு இனத்தின் நினைவேந்தல் பண்பாடு.
மாவீரர் என்ற சொல் ஈழத் தமிழ் அரசியல் வரலாற்றில் ஈழ மக்களின் நெஞ்சங்களின் உணர்வில் கலந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளை அவர்களின் உறவினர்களும் தமிழ் மக்களும் மாவீரர்களாக நினைவுகூருகின்றனர். தமது இளமையை, குடும்ப உறவுகளை, தனிப்பட்ட எதிர்காலத்தைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்களாக அவர்கள் நினைவில் நிறுத்தப்படுகின்றனர்.
முதல் மாவீரன்
அந்த வகையில் 1982 நவம்பர் 27ஆம் திகதி போரில் உயிர் நீத்த முதல் மாவீரன் லெப்டினன்ட் சங்கரின் நினைவாகத் தொடங்கிய மாவீரர் நாள், பின்னர் தமிழர் தேசிய நினைவேந்தல் மரபின் முக்கியமான நாளாக வளர்ந்தது. 1989ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டு, காலப்போக்கில் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்களின் கூட்டு நினைவாக மாறின. இன்று வடக்கு – கிழக்கில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் வாரம் நினைவுகூரப்படுகின்றது.
மாவீரர் துயிலும் இல்லங்கள் என்பது வெறும் கல்லறைகளல்ல. ஒரு காலத்தின் அரசியல் வரலாற்றையும், போராட்டத்தின் தியாகங்களையும், குடும்பங்களின் இழப்புகளையும் தாங்கி நிற்கும் நினைவிடங்கள். ஒழுங்கமைக்கப்பட்ட கல்லறைகள், பெயர்ப்பலகைகள், நினைவுத் தூபிகள், விளக்கேற்றும் இடங்கள் எனத் துயிலும் இல்லங்கள் தமிழர் சமூகத்தின் நினைவியல் வெளிகளாக உருவெடுத்திருந்தன. மாவீரர் நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு ஒன்றுகூடி மலர்வைத்து, விளக்கேற்றி, தாம் தாயக விடுதலைக்கும் உரிமைக்குமான களமாடி மாண்டவர்களை நினைவுகூர்கின்றனர்.
துயிலும் இல்லங்கள்மீதும் இனவழிப்பு
ஆனால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தத் துயிலும் இல்லங்களின் மீது நிகழ்த்தப்பட்ட அழிப்புகள் தமிழர் நினைவுகளை அழிக்கும் முயற்சியேயாகும். வடக்கு – கிழக்கில் இருந்த பல துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. சில இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. கல்லறைகள் இருந்த இடங்களில் இராணுவத்தின் முகாங்கள் எழுப்பப்பட்டன. பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டு, நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த உடல்களின் அடையாளங்கள்கூடத் தேட முடியாத நிலை உருவாக்கப்பட்டது. சில இடங்களில் மண்ணுடன் அகழந்துகூட கல்லறையை அழித்துள்ளனர்.
எத்தகைய அழிவுகளை கண்டபோதும்கூட அந்த மண்ணின் நினைவுகளை மக்கள் கைவிடவில்லை. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் வரும்போது மக்கள் துயிலும் இல்லங்களைச் சுத்தப்படுத்துகிறார்கள். அழிக்கப்பட்ட நினைவிடங்களை மீளமைக்க முயற்சிக்கிறார்கள். சில இடங்களில் எஞ்சியிருக்கும் அடையாளங்களைப் பாதுகாக்கிறார்கள். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் வடக்கு – கிழக்கின் பல பகுதிகளில் மக்கள் ஒன்றிணைந்து துயிலும் இல்லங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நினைவேந்தல் உரிமை
இத்தகைய சூழலில் நினைவேந்தல் உரிமை என்பது ஈழத் தமிழ் மக்களின் மனித உரிமையாகும். மாவீரர்களுக்காக விளக்கேற்றுவது என்பது மனிதர்களின் அடிப்படை உணர்வுகளோடும் உரிமைகளோடும் தொடர்புடையவை. இலங்கை அரசாங்கமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை நிபுணர்களுக்கு அளித்த பதிலில், தனிநபர்கள் தமது உறவினர்களுடன் இறந்த அன்புக்குரியவர்களை நினைவுகூர்வதற்கான உரிமை இருப்பதாகவும், அரசியலமைப்பு அமைதியான ஒன்றுகூடல், கருத்து வெளிப்பாடு, கலாசார உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் வடக்கு – கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒவ்வோர் ஆண்டும் பொலிஸ் விசாரணைகள், நீதிமன்றத் தடையுத்தரவு கோரிக்கைகள், கண்காணிப்புகள், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு முகங்கொடுக்கின்றன.
துயிலும் இல்லங்களைச் சுத்தப்படுத்தச் செல்லும் மக்களிடம் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். நிகழ்வுகளைத் தடைசெய்வதற்காக நீதிமன்றங்களை நாடும் முயற்சிகளும் தொடர்கின்றன. நினைவுகூர்வதற்காகவே ஒரு மக்கள் ஒவ்வோர் ஆண்டும் சட்டப் போராட்டத்திற்குள் தள்ளப்படுவது, போருக்குப் பின்னரான காலத்தில் ஈழ மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறையாகும்.
சாட்டி துயிலும் இல்லம் சாட்சி
சாட்டி மாவீரர் துயிலும் இல்ல வழக்கு இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு. காணி உரிமை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் நினைவேந்தலைத் தடைசெய்ய பொலிஸார் நீதிமன்றத்தை நாடினர். முதற்கட்ட விசாரணையில் தடை கோருவதற்கான சட்டப் பிரிவு தெளிவாகக் குறிப்பிடப்படாததை சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். பின்னர் நவம்பர் 20ஆம் திகதி வழக்கை விசாரித்த ஊர்காவற்றுறை நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106ஆம் பிரிவு இவ்விடயத்திற்குப் பொருந்தாது எனக் குறிப்பிட்டு, உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவுகூரும் உரிமையை மறுக்க முடியாது என்று தெரிவித்தது. இதனடிப்படையில் சாட்டியில் நினைவேந்தல் நிகழ்வுகளை வழமைபோன்று முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களை மீளமைப்பதற்கான உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும். நினைவிடங்களின் வரலாற்றுத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். தமது உறவுகளை நினைவுகூரும் குடும்பங்கள் அச்சமின்றி ஒன்றுகூடுவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் குற்றமாக்கும் அணுகுமுறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உண்மையில் இவை மனித உரிமை, கலாசார உரிமை, குடும்பங்களின் துயரத்தை மதிக்கும் நாகரிகக் கடப்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலான கோரிக்கைகள்.
அழிக்க முடியாத நினைவுகள்
மாவீரர் வாரம் என்பது மண்ணின் அரசியல் வரலாற்றையும், ஒரு தலைமுறையின் இழப்புகளையும், இன்னமும் தீர்க்கப்படாத தேசியப் பிரச்சினையையும் நினைவுகள் வழியாகப் போராடுகிற காலம். மாவீரர்களின் நினைவுகள் தமிழர் சமூகத்தின் அரசியல், வரலாற்று, பண்பாட்டு நினைவுகளோடு பின்னிப் பிணைந்துள்ளன. எனவே நினைவேந்தல் உரிமை தடையின்றி இருக்க வேண்டும். அழிக்கப்பட்ட கல்லறைகள் மீள எழுப்பப்பட வேண்டும். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நினைவிடங்கள் விடுவிக்கப்பட வேண்டும். தாய்மார்கள் தமது பிள்ளைகளின் நினைவிடங்களில் அச்சமின்றி விளக்கேற்ற வேண்டும். மாவீரர்களின் பெயர்களைச் சொல்லவும், அவர்களின் நினைவுகளோடு வாழவும் தமிழ் மக்களுக்கு அனுமதி கேட்க வேண்டிய நிலை முடிவுக்கு வர வேண்டும்.
மண்ணில் புதைக்கப்பட்ட உடல்களை அழித்து, கல்லறைகளை இடித்து பெயர்ப்பலகைகளை அகற்றிவிடலாம். ஆனால் ஒரு தலைமுறையின் நினைவுகளை அழிக்க முடியாது என்பதை தமிழர் தேசத்தில் துவங்கியுள்ள மாவீரர் வாரம் மீண்டும் உலகுக்கு உணர்த்துகிறது.
