நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

ஈழத் தளபதி மேதகு பிரபாகரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!


இத்தனை தடைகளின் மத்தியில் ஏன் இந்தத் தலைவர் கொண்டாடப்படுகிறார்?

இன்றும் எப்படி கொலுவீற்றீருக்கின்றார்??

பார்த்தீபன் 25-11-2026

ஶ்ரீலங்கா அரசு, தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயரையும் உருவப்படத்தையும் சட்ட ரீதியாகத் தடை செய்திருக்கிறது. அமைப்பின் இலட்சனை, கொடி,ஈழ தேசியக் கொடி,பாடல்கள், நூல்கள் என தடைப்பட்டியல் நீள்கின்றது.ஆனால் இன்றைய நாட்களில் கடும் அடக்குமுறைகளின் மத்தியிலும் “வாராது வந்துதித்த மாமணியை வாழ்த்துவோமே!” என்ற வாழ்த்தொலியோடு ஈழத் தமிழர்களின் இதயங்கள் நிறைந்திருக்கிறது. தானைத் தலைவனே, உன் சேனை காத்திருக்கிறது என்ற உணர்வில், காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய நாயகனை, தேசிய நினைவின் தொடர்ச்சியாக ஈழ மண் நினைந்து ததும்புகிறது. இந்த நாளின் வழியாக ஈழத் தளபதிமீது, அவர் தம் தேசம், இனம் கொண்டிருக்கும் ஆழமான பற்று புரிகின்றது. அவர் வழியே தமது விடுதலையைப் பற்றிக் கனவு கண்ட ஒரு தேசிய இனத்தின் தீராத தாகமும் தெரிகின்றது. அடங்கா விடுதலைத் தீ ஆழ் மனதில் எரிகின்றது.

தனிப்பெரும் நினைவு

தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதான இந்தப் பற்று,மதிப்பு ஏன் இவ்வளவு ஆழமானது? உண்மையில் இது ஒரு தனிப்பெருமனிதனின் மீதான ஈர்ப்பு மாத்திரமின்றி ஒரு காலத்தின் அரசியல் வரலாற்றின் மீதும், விடுதலைக்காகப் போராடிய மக்களின் கூட்டு நினைவின் மீதும், இன்னும் நிறைவேறாத ஈழத் தேசிய விடுதலைக் கனவின் மீதும் கொண்டிருக்கும் பெரும்பற்றாகும். 2009இற்குப் பின்னர் தம் வாழ்வைப் போராட்டமாக்கிய ஈழத் தமிழ் மக்கள் தங்கள் விடுதலைக் கனவையும் அரசியல் உரிமைக்கான போராட்டத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்கும் நாளாகவும் இதனை வெளிப்படுத்துகின்றனர்.

ஈழத் தமிழர்களின் மனங்களில் பிரபாகரன் என்பவர் வெறுமனே ஒரு அரசியல் அல்லது இராணுவத் தலைவராகவன்றி ஒரு காலத்தின் அடையாளமாகவும், இழப்புகளால் நிரம்பிய ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் குறியீடாகவும் இருக்கிறார். அவர்மீதான பற்று, அவரைப் பற்றிய நினைவுகள், அவரை மீண்டும் காணவேண்டும் என்ற ஏக்கம் என்பவற்றை வெறுமனே தனிமனித வழிபாடாகக் குறுக்கிவிட முடியாது. அந்த உணர்வுகளுக்குப் பின்னால் ஒரு மக்களின் அரசியல் வரலாறும், இழக்கப்பட்ட வாழ்வும், நிறைவேறாத விடுதலைக் கனவும் மிக ஆழமாகப் புதைந்து இருக்கின்றன.

உலகை ஈர்த்த போராட்டம்

பிரபாகரன் ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினையை உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். இலங்கைத் தீவில் தமிழர்கள் எதிர்கொண்ட மொழி ஒடுக்குமுறை, அரசியல் உரிமை மறுப்பு, இனவழிப்புகள், நில அபகரிப்புகள், இராணுவ ஒடுக்குமுறைகள் ஆகியவற்றை வெறுமனே உள்நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்க முடியாது என்பதை உலக அரங்கில் எடுத்துரைத்தார். தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையாக முன்னிறுத்தினார். அவரது தலைமையின் வரலாற்றை மதிப்பிடும்போது, அந்த அரசியல் பங்களிப்பையும் அவர் உருவாக்கிய தேசிய உணர்வின் பரிமாணத்தையும் புறக்கணிக்க முடியாது.

அவரது தலைமையைப் பற்றிய நினைவுகளில் முக்கியமானது, இறுதிவரை மக்களுடனும் போராட்டத்துடனும் அவர் கொண்டிருந்த உறவு. தனிப்பட்ட பாதுகாப்பையும் வசதிகளையும் முன்னிறுத்தாமல், தான் ஏற்றுக்கொண்ட அரசியல் இலட்சியத்திற்காக வாழ்ந்த ஒரு தலைமைத்துவத்தின் நினைவாகவே பலரது மனங்களில் அவர் இருக்கிறார். இத்தனை தடைகள், இத்தனை இழப்புகளின் பின்னரும் பிரபாகரன் நினைவு ஈழ மக்களின் மனங்களில் முழங்குகிறது என்றால் இலங்கைத் தீவின் அரசியல் இன்னமும் பல பாடங்களைப் புகட்டுகிறது.

ஈழமாகப் பிரிந்து செல்ல வேண்டுமா?

பிரபாகரனின் பிறந்தநாளில் நாம் எழுப்ப வேண்டிய அடிப்படையான கேள்வி, ஈழத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் என்ன என்பதுதான். ஈழம் அல்லது பிரிவினை அவசியமா என்பதை ஒரு மக்களின் உணர்வுகளைக் கொண்டு மட்டும் தீர்மானிக்க முடியாது. அதற்கான புறவய அரசியல் அவசியத்தையும் ஆராய வேண்டும். இலங்கை அரசுமுறை இரண்டு தேசிய இனங்களையும் சமத்துவமாக நடத்துவதற்குத் தயாரற்ற பெருந்தேசிய அரசியல் கட்டமைப்பாகத் தொடர்வதும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஈழ- இனப்படுகொலைக்கான நீதியை வழங்க மறுப்பதும், ஈழத் தேசியத்தின் மீதான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து பேணுவதும் அந்த அவசியத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.

அலங்காரச் சொல்லாக ``நல்லிணக்கம்``!

சமத்துவமற்ற ஓர் அரசியல் கட்டமைப்புக்குள் ஒரு தேசிய இனத்தைக் கட்டாயமாக இணைத்து வைத்திருக்கும் நிலைமை.உண்மையில் இது நல்லிணக்கமல்ல.  கட்டாய இணைப்பின் மூலம் உண்மையான இலங்கையர் என்ற பொதுவான அடையாளத்தை உருவாக்க முடியாது. சமத்துவமும் நீதியும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் நல்லிணக்கம் என்பது வெறும் அரசியல் அலங்காரச் சொல்லாகவே எஞ்சும். இதைத்தான் ஒடுக்கப்படும் தேசங்கள் அனைத்தினதும் வரலாறுகளில் நாம் படிக்க முடிகிறது.இலங்கை அதற்கு விதிவிலக்கல்ல!

எனவே, ஆறாவது அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்குதல், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குதல், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுதந்திரமான பொதுவாக்கெடுப்பை அவர்களிடையே நடத்துதல், ஈழத் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை- பிரிந்து செல்லும் உரிமையை- அங்கீகரிக்கும் அரசியலமைப்பை உருவாக்குதல் ஆகியவை வெறும் கோரிக்கைகள் அல்ல. நீதியான அரசியல் தீர்வுக்கான அடிப்படைத் தேவைகள். இந்தக் கோரிக்கைகள் இல்லாத நல்லிணக்கமும், சமத்துவமற்ற ஒற்றையாட்சிக்குள் முன்வைக்கப்படும் ஒற்றுமையும் வெற்று வார்த்தைகளே.

ஈழத் தேசத்தின் அரசியல் ஏக்கம்

பிரபாகரனின் பிறந்தநாளில் அவரை வாழ்த்துவதும் நினைவுகூர்வதும் இந்த அரசியல் இலட்சியங்களை மீண்டும் துயிலெழுப்புவதாக இருக்க வேண்டும். மாவீரர்களின் நினைவுகளையும், போரில் உயிரிழந்த மக்களின் துயரங்களையும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் காத்திருப்பையும், நிலம் இழந்த மக்களின் ஏக்கத்தையும்,யுத்த இழப்பீடுகளையும் ஒரு தேசிய அரசியல் இயக்கமாக மாற்ற வேண்டும்.

ஒரு தலைவரின் பிறந்தநாள் என்பது கடந்த காலத்தை மட்டும் நினைவுகூருவதாகவன்றி அந்தத் தலைமை உருவான வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொண்டு, இன்னும் தீர்க்கப்படாத தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் அரசியல் வழியை, இன்றைய சூழலில் தேடும் நாளாக இருக்க வேண்டும். அத்துடன் அவர் முன்வைத்த விடுதலைக் கனவின் அரசியல் அடிப்படைகளை மீண்டும் விவாதிப்பதிலும், ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தை நீதியின் வழியில் முன்னெடுப்பதிலும் நம் பணியைத் தொடர வேண்டும். தலைவர் பிரபாகரனை நேசிக்கும் ஈழ மக்களின் விடுதலை இன்னும் பிறக்கவில்லை என்ற வரலாற்று உண்மையை உணர்ந்து அவரது வழியில் ஒற்றுமையுடன், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன், கொள்கைப் பற்றுடன் நாம் பயணிப்பதுதான் இன்றைய நாளின் மெய்யான அர்த்தமாகும்.

தானைத் தலைவனே, உன் சேனை தூங்காது-ஆணை!

ஒத்தவை: