மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சனை:
தமிழர்களின் பொருளாதாரத்தை ஒடுக்கும் நடவடிக்கையே!
பார்த்தீபன் ஈழம் 07-11-2026
ஈழமண் எங்களின் தேச மண். இங்கு ஆட்கள் மாத்திரமல்ல, ஆநிரைகளும் தமது வாழ் நிலத்திற்காகப் போராடுகின்றனர். இதற்கு இன்று மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனைப் பகுதியில் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவே தமிழ்ப் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டமே சாட்சியெனலாம். தமிழ் இனத்தை அழிக்கும்போதும் ஒடுக்கும்போதும் அவர்தம் பொருளாதாரத்தையும் ஶ்ரீலங்கா அரசு அழித்து வருகின்றமை வரலாறு. 83 கறுப்பு ஜூலை முதல் முள்ளிவாய்க்கால் வரையான நிகழ்வுகள் இதனை காட்டுகின்றன. இன்று மயிலத்தமடு, மாதவனையிலும் இதுவே நிகழ்கிறது.
பாரம்பரிய மேய்ச்சல் தரை
பண்டைய தமிழ்ச் சமூகத்தில் பசு செல்வத்தின் அடையாளமாக இருந்தது. ஒருவரிடம் எத்தனை ஆநிரைகள் இருக்கின்றன என்பதைக் கொண்டே அவரது பொருளாதார வளம் மதிப்பிடப்பட்ட காலம் இருந்தது. நிலமும் நீரும் போலவே கால்நடைகளும் ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாக விளங்கின. பசுக்கள் பால் கொடுத்தன. உழவுக்கு உதவின. குடும்பங்களின் பொருளாதாரத்தைத் தாங்கின. அதனால்தான் ஆநிரை கவர்தலும் மீட்டலும் பண்டைய தமிழர் வரலாற்றில் அரசியல் மற்றும் போரியல் நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்டன.
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, போரதீவுப்பற்று, கிரான், செங்கலடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பண்ணையாளர்களின் தலைமுறை தலைமுறையான கால்நடை வளர்ப்புடன் தொடர்புடைய நிலப் பகுதியாகும். பருவகால நெற்செய்கை முடிந்த பின்னர் கால்நடைகளை அங்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வாழ்வியல் நடைமுறை. அந்த நிலத்தை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது பொருளாதாரத்தை அமைத்திருந்தன. ஆனால் அந்தப் பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிக்கப்பட்டு, மறுக்கப்பட்டபோது, பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும் நெருக்கடிக்குள்ளானது.
2023 செப்டெம்பர் 15ஆம் திகதி பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாக்கத் தொடங்கிய தொடர் போராட்டம் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. சுமார் 3,025 ஹெக்டேயர் பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தை மீள வழங்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கை. அந்தப் பகுதியில் குடியேற்றங்களும் விவசாய நடவடிக்கைகளும் விரிவடைந்ததாகப் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவை தொடர்பாக நீதிமன்றங்களில் நடவடிக்கைகள் இடம்பெற்றபோதும், நிலைமையில் நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை. 2026 செப்டெம்பரில் மேய்ச்சல் நிலமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்னமும் அங்கு மக்கள் எதிர்கொள்ளும் நிலப்போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காத நிலை நீள்கிறது.
`ஆநிரை சுடுதல்` -மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலம்_பசுக்களின் பலிக்கள
பலியெடுக்கப்படும் பசுக்கள்
இந்த நிலப்பிரச்சினையின் இன்னொரு கொடூரமான முகத்தைப் பேரினவாதம் காட்டுகிறது. கால்நடைகள் கொல்லப்படுவதாக வெளியாகும் முறைப்பாடுகள் அரச தரப்பால் கண்டுகொள்ளப்படாத நிலையும் தொடர்கிறது. மாடுகள் சுடப்படுதல், வெட்டுக் காயங்களுக்கு உள்ளாக்கப்படுதல், நஞ்சூட்டப்படுதல் போன்ற சம்பவங்கள் குறித்து பண்ணையாளர்களும் மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன. 2026 ஒக்டோபரிலும் கால்நடைகள் சுடப்பட்டதாகவும் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஒரு மாட்டின் கழுத்தில் நான்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான குற்றச்சாட்டுகளாக விசாரிக்கப்பட வேண்டியவை. ஆனால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் இத்தகைய முறைப்பாடுகளுக்கு உரிய விசாரணையும் நீதியும் கிடைக்காதிருப்பது பண்ணையாளர்களின் பாதுகாப்பின்மையை மேலும் அதிகரிக்கிறது.
இலங்கை இன்று பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முயற்சித்துக்கொண்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு, உள்ளூர் உற்பத்தி, கிராமியப் பொருளாதாரம், பால் உற்பத்தி ஆகியவை தேசிய பொருளாதாரத்தின் முக்கியமான கூறுகளாகப் பேசப்படுகின்றன. ஆனால் மறுபுறத்தில், உள்ளூர் பால் உற்பத்தியைத் தாங்கி நிற்கும் தமிழ்ப் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலம் பாதுகாக்கப்படாமல் இருப்பது எத்தகைய பொருளாதாரக் கொள்கை? மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினையால் மட்டக்களப்பின் நாளாந்தப் பால் உற்பத்தி சுமார் 5,000 லீற்றரிலிருந்து 500 லீற்றராக வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு மாவட்டத்தின் பால் உற்பத்தி வீழ்ச்சி மாத்திரமின்றி ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானம், கால்நடைச் செல்வம், உள்ளூர் உணவு உற்பத்தி ஆகியவற்றின் மீதான பாதிப்பாகும்.
பொருளாதார ஒடுக்குமுறை
இங்கு எழுகின்ற அரசியல் கேள்வி முக்கியமானது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாகக் கூறும் அரசு, தமிழர்களின் உற்பத்திப் பொருளாதாரத்தைத் தாங்கும் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கத் தவறுவது ஏன்? வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பல்வேறு அரச நிறுவனங்களின் நடவடிக்கைகள், குடியேற்றத் திட்டங்கள், வனப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்ற பெயர்களின் கீழ் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினையும் இந்தப் பரந்த நில ஆக்கிரமிப்பு அரசியலின் ஒரு பகுதியாகும். நிலத்தைப் பறிப்பது என்பது மனிதர்களின் வீடுகளையும் வயல்களையும் பறிப்பதோடு முடியாமல் அந்த நிலத்தில் வாழும் உயிரினங்களின் வாழிடத்தையும் உணவையும் நீரையும் பறிப்பதாகவும் அது மாறுகிறது. அதற்கு மயிலத்தமடு ஒரு சாட்சி.
தமிழர்களின் நிலத்தைப் பறிக்கும் அரசியல் எவ்வாறு ஒரு சமூகத்தின் வாழ்வை நெருக்கடிக்குள் தள்ளுகிறதோ, அதேபோல தமிழ் நிலத்தின் ஆநிரைகளின் மேய்ச்சல் நிலத்தையும் இரையையும் பறிப்பது அந்தச் சமூகத்தின் பொருளாதாரத் தொடர்ச்சியையே பாதிக்கிறது. மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லையென்றால் அவை உயிர்வாழ முடியாது. பண்ணையாளர்களுக்கு மாடுகள் இல்லையென்றால் அவர்களின் வாழ்வாதாரம் அழியும். இந்த எளிய உண்மையைப் புரிந்துகொள்ள முடியாத இலங்கை அரச நிர்வாகம் எப்படிப் பொருளாதார மீட்சியை அடையும்?
ஆநிரைகளுக்கான போராட்டம் மட்டுமா?
எனவே, மயிலத்தமடு – மாதவனைப் பண்ணையாளர்கள் தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலத்தை மீட்டுத் தருமாறும், கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துமாறும் கோருகின்றனர். நிலம் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்புகள் வெறும் அரசியலுக்காக வெளியிடப்படாமல், மக்களின் போராட்டத்தை முடக்குவதற்காக வெளியிடப்படாமல், காகிதத்தில் முடங்காமல் நடைமுறைக்கு வர வேண்டும். கால்நடைகளைக் கொன்றவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்படுவோர் மீது விசாரணை நடத்தப்பட்டு, சட்டத்தின் முன் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.
ஒரு பிரதேசத்தின் செல்வத்தை அழித்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. இலங்கை அரசின் பொருளாதார எண்ணம் குறித்த வீழ்ச்சியான போக்கின் வெளிப்பாடு இதுவாகும். மயிலத்தமடு – மாதவனைப் போராட்டம், மேய்ச்சல் நிலத்திற்கான கோரிக்கையைத் தாண்டி, தமிழர்களின் நில உரிமையையும் பொருளாதார இருப்பையும் உயிர்களின் வாழ்வுரிமையையும் வலியுறுத்துகிறது. ஆநிரை செல்வமாக இருந்த தமிழர் மரபில் இன்று அந்த ஆநிரைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மக்கள் போராடுகின்றனர்.
எங்கள் கால் நடை மேய வேண்டும்! எங்கள் மேய் நிலம் எமக்கு வேண்டும்!!

