எதிர்ப்பின் அரசியலில் சிவாஜிலிங்கம்!
பார்த்தீபன் ஈழம் 15-11-2026
அரசியலில் சிலர் தமது பதவிகளாலும் அதிகாரங்களாலும் அறியப்படுவதுதான் வழக்கமானது. இன்னும் சிலர் தமது அரசியல் நிலைப்பாடுகளாலும், தொடர்ச்சியான எதிர்ப்புச் செயற்பாடுகளாலும் அடையாளம் காணப்படுகிறார்கள். ம.க. சிவாஜிலிங்கம் இரண்டாவது வகையைச் சேர்ந்த ஓர் ஈழத் தமிழ் அரசியல் தலைவர். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அரசியல் உரிமைகள், போருக்குப் பிந்தைய நிலைமைகள், நினைவேந்தல் உரிமைகள் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவந்த அவர், தனது 69ஆவது வயதில் நவம்பர் 14ஆம் திகதி காலமானார். அவரது மறைவு, நீண்டகாலமாக வடக்கு அரசியலில் இயங்கிய குறிப்பிடத்தக்கதொரு அரசியல் இழப்பாகும்.
பாராளுமன்ற உறுப்பினராக!
1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி வடமராட்சி வல்வெட்டித்துறையில் பிறந்த சிவாஜிலிங்கம், தனது அரசியல் பயணத்தைத் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் (TELO) ஊடாக ஆரம்பித்தார். ஆயுதப் போராட்டச் சூழலில் அரசியலுக்குள் நுழைந்த அவர், பின்னர் ரெலோ ஜனநாயக அரசியல் வழிமுறைக்கு வந்தபோது அதன் முக்கிய அரசியல் செயற்பாட்டாளராகவும் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.
2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் பங்களித்த அரசியல் தலைவர்களில் சிவாஜிலிங்கமும் ஒருவர். ரெலோ உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய அந்தக் கூட்டமைப்பின் ஊடாக 2001, 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். பின்னர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மாகாண சபை உறுப்பினராகவும் செயற்பட்டார்.
நினைவேந்தல் போராட்டக் களங்கள்
2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான தமிழர் அரசியல் சூழலில் சிவாஜிலிங்கம் கவனத்திற்கு உரியவராகினார். ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், காணி அபகரிப்பு, இராணுவப் பிரசன்னம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் மற்றும் போர்க்காலப் பொறுப்புக்கூறல் போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து பேசப்பட வேண்டியிருந்தன. இந்த விவகாரங்களில் சிவாஜிலிங்கம் தீவிரமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார்.
குறிப்பாக, போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமையைப் பாதுகாப்பதற்காக அவர் முன்னெடுத்த செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. அரசாங்கத்தின் தடைகள், பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் காணப்பட்ட காலப்பகுதிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அவர் முன்வந்தார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல், மாவீரர் நினைவுகள் மற்றும் போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் அவரது பங்களிப்பு இதற்குச் சான்றாகும்.
சிவாஜிமீது சட்டநடவடிக்கை
2020ஆம் ஆண்டு திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமைக்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பில் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டார். 2023ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இத்தகைய சம்பவங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமை எதிர்கொண்ட அரசியல் மற்றும் சட்டரீதியான நெருக்கடிகளை வெளிப்படுத்தியதுடன், அந்தச் சூழலில் சிவாஜிலிங்கம் எடுத்த நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தின.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் குடும்ப உறவைக் கொண்டிருந்த சிவாஜிலிங்கம், போருக்குப் பின்னரும் பிரபாகரனைத் தமிழ்த் தேசிய அரசியலின் தலைவராக வெளிப்படையாகக் குறிப்பிட்டு வந்தார். பிரபாகரனின் பெற்றோருடனும் நெருக்கமான உறவைப் பேணினார். குறிப்பாக, பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளை ஒழுங்கமைத்ததுடன், தாயார் பார்வதி அம்மாளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவிகளிலும் ஈடுபட்டார். அரசியல் உறவுகளுக்கு அப்பால், தனிப்பட்ட பொறுப்புணர்வின் அடிப்படையிலும் அவர் செயற்பட்டமை அவரது வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க பக்கமாகும்.
தனித்துப் போட்டியிடுதல்
தமிழர் அரசியல் பிரச்சினைகளை இலங்கைக்கு வெளியேயும் எடுத்துச் செல்லும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டார். 2014ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது, போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் சுயாட்சிக்கான பொதுவாக்கெடுப்பு, சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்தியும் வந்தார். அத்துடன் இந்தியாவிலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை முன்னிறுத்திய போராட்டங்களில் பங்கேற்றார். வடக்கு, கிழக்கில் நடைபெற்ற பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் அவரது பங்களிப்பு இருந்தது.
எனினும், சிவாஜிலிங்கத்தின் அரசியல் பயணம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. அவரது அரசியல் அணுகுமுறையின் முக்கியமான பலவீனமாகத் தனித்துப் போட்டியிடும் அரசியல் முடிவுகள் கருதப்படுகின்றன. கூட்டுத் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளும்கூட சிவாஜிலிங்கத்தின் விமர்சனப் பகத்திற்கு உரியவையாக ஒரு தரப்பால் சொல்லப்படுகிறது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு மாறாகச் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அப்போது கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரித்திருந்தது. சிவாஜிலிங்கத்தின் தனித்துப் போட்டியிடும் முடிவு தமிழ் வாக்குகளின் அரசியல் திசையைப் பலவீனப்படுத்தியதாகச் சில தமிழ் அரசியல் விமர்சகர்கள் கருதினர். அந்தத் தேர்தலில் அவர் 9,662 வாக்குகளையே பெற்றார். 2015ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக சிவாஜிலிங்கம் சுயேச்சைக் குழுவை நிறுத்தியிருந்தார். அந்தத் தேர்தலில் சிவாஜிலிங்கத்தின் குழு மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றது. தன்னை தோற்கடிக்கும் சதி என மகிந்த ராஜபக்சவின் இனவாதப் பிரச்சாரங்களுக்கு மறைமுக வாய்ப்பை ஏற்படுத்தியது.
ரெலோவிலிருந்து மன வெளியேற்றமா?
2019ஆம் ஆண்டிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் எடுத்த முடிவு தனது சொந்தக் கட்சியான ரெலோ கட்சிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியது. கட்சியின் தீர்மானத்திற்கு மாறாகப் போட்டியிட்டதால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்ட அவர், பின்னர் கட்சியிலிருந்து விலகினார். இந்தச் சம்பவங்கள், அவரது அரசியல் உறுதிப்பாடு ஒருபுறமிருக்க, கூட்டுச் செயற்பாடுகளையும் அரசியல் ஒருங்கிணைப்பையும் பேணுவதில் அவர் எதிர்கொண்ட சிக்கல்களை வெளிப்படுத்துகின்றன.
அவரது அரசியல் வாழ்வில் மற்றொரு கவனிக்கத்தக்க முரண்பாடும் உள்ளது. ரெலோவின் உறுப்பினராக அரசியலுக்கு வந்த அவர், 1986ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் ரெலோவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது உயிர்தப்பியவர்களில் ஒருவர். பின்னாளில் அதே விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைமையையும் வெளிப்படையாக ஆதரித்த அரசியல் குரலாக அவர் மாறினார். இது அவரது அரசியல் நிலைப்பாட்டின் பரிணாமத்தையும், தமிழ்த் தேசிய அரசியலில் காலப்போக்கில் உருவான மாற்றங்களையும் புரிந்துகொள்வதற்கான முக்கியமான வரலாற்றுப் புள்ளியாகும்.
தேச நலனுக்கான மதிப்பீடு
அரசியல் ரீதியாகப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த சிவாஜிலிங்கம், தனது இறுதிக் காலத்தில் மீண்டும் உள்ளூராட்சி அரசியலில் ஈடுபட்டார். 2025ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராகப் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்திலும் மாகாண சபையிலும் பணியாற்றிய ஒருவர், தனது அரசியல் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் பிறந்த மண்ணின் உள்ளூராட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தார். சிவாஜிலிங்கத்தின் மறைவை ஒரு தனிநபரின் இழப்பாக மட்டும் பார்க்க முடியாது. போருக்குப் பின்னரான தமிழ் அரசியலில் நினைவேந்தல், உரிமை, எதிர்ப்பு, தேசிய அடையாளம் ஆகியவற்றை முன்னிறுத்திய ஒரு அரசியல் தலைமுறையின் அனுபவங்களையும் முரண்பாடுகளையும் அவரது வாழ்க்கை பிரதிபலிக்கின்றது.
ஒரு அரசியல் தலைவரை மதிப்பிடுவது அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் புகழ்வதன் மூலம் மட்டும் நிகழக்கூடாது. அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழல், அவர் எடுத்த முடிவுகள், அவர் முன்னெடுத்த போராட்டங்கள், அவற்றின் வெற்றிகள், தோல்விகள், முரண்பாடுகள் அனைத்தையும் வரலாற்றின் முன் வைத்து மதிப்பிடுவதிலேயே அவரது உண்மையான அரசியல் பங்களிப்பு புரிந்துகொள்ளப்பட முடியும். சிவாஜிலிங்கத்தின் இழப்பின்போதும் அத்தகையதொரு திறந்த வரலாற்று மதிப்பீட்டை நிகழ்த்துவது எமது தேசத்திற்கே நலனாகும்.
அந்நாருக்கு அஞ்சலி!

