நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்

ஒளி வரைந்த தேசம்


ஒளியால் தேசத்தை வரைந்த ஈழ மக்கள்…

பார்த்தீபன்-ஈழம்-28.11.2026

கார்த்திகை மாதத்தின் இருள் கவிந்த மாலையில் ஈழத் தேசம் முழுவதும் ஒளிகள் ஏற்றப்பட்டன. அவை ஒரு தலைமுறையின் நினைவுகளையும், ஓர் இனத்தின் இழப்புகளையும், முடிவுறாத வரலாற்றின் வலிகளையும் சுமந்து நின்றன. வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. துயிலும் இல்லங்கள், நினைவிடங்கள், பொதுவெளிகள், பல்கலைக்கழக வளாகங்கள் எனத் தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் மக்கள் ஒன்றுகூடி விளக்கேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பல ஆண்டுகளாக அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களின் நிலங்களில் மீண்டும் மக்கள் காலடிகள் பதிந்தன. இடித்தழிக்கப்பட்ட நினைவிடங்களின் அருகில் விளக்குகள் ஏற்றப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் துயிலும் இல்லங்களுக்கு முன்னால், கிடைத்த இடங்களில் மக்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். நினைவுகூர்வதற்கான இடங்கள் மறுக்கப்பட்டபோதும் நினைவுகூரும் மக்களைத் தடுக்க முடியவில்லை. இந்த ஆண்டின் மாவீரர் நாள் தாயகத்தில் வெளிப்படுத்திய மிக முக்கியமான செய்தி இதுவாகும்.

எட்டு மாவட்டங்களிலும் எழுந்த நினைவொளி

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என ஈழத் தமிழர் தேசமான வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

கிளிநொச்சியில் கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். தமது பிள்ளைகளின் கல்லறைகளுக்கு முன்னால் பெற்றோர்கள் விளக்கேற்றினர். உறவினர்கள் மலர்தூவிக் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் மாவீரர் நாளுக்காக அமைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் வீதி வளைவுகளையும் பொலிஸார் நள்ளிரவில் அகற்றியிருந்தனர். அதனுடன் தொடர்புடையவர்கள் என எட்டுப் பேரைக் கைது செய்திருந்தனர். இத்தகைய தலையீடுகளுக்குப் பின்னரும் கனகபுரத்திலும் முழங்காவிலிலும் மக்கள் பெருந்திரளாக ஒன்றுகூடியிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடினர். அளம்பில் முதல் விசுவமடு வரையான பல்வேறு நினைவிடங்களிலும் மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். புதுக்குடியிருப்புப் பகுதியில் கடைகள் மூடப்பட்டு, வீதிகளில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஒரு நிலத்தின் நினைவுகள் எவ்வாறு அந்த நிலத்தின் மக்களின் வாழ்வோடு கலந்திருக்கின்றன என்பதற்கு முல்லைத்தீவின் இந்தக் காட்சிகள் சாட்சியாகின.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கொடிகாமம், உடுத்துறை, சாட்டி, எள்ளங்குளம் உள்ளிட்ட இடங்களிலும் நல்லூர் மாவீரர் நினைவாலயத்திலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதன் முன்னால் உள்ள காணியில் மக்கள் அஞ்சலி செலுத்தினர். துயிலும் இல்லத்தின் நிலத்திற்குள் செல்ல முடியாத தாய்மார்கள் அதன் அருகில் நின்று தமது பிள்ளைகளை நினைவுகூர்ந்தனர். நல்லூர் நினைவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தீப்பந்தங்களுடன் திரண்டனர்.

மன்னாரில் ஆட்காட்டிவெளி, பெரியபண்டிவிரிச்சான் உள்ளிட்ட துயிலும் இல்லங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. வவுனியாவில் ஈச்சங்குளம் துயிலும் இல்லம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அருகிலுள்ள இடங்களில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி உள்ளிட்ட துயிலும் இல்லங்களில் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். குறிப்பாக, தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நிகழ்வு இடம்பெற்றது. திருகோணமலையின் சம்பூர் ஆலங்குளத்திலும், அம்பாறையின் கஞ்சிக்குடிச்சாற்றிலும் மக்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களின் மீது எழுந்த ஒளி

இந்த மாவீரர் நாளின் காட்சிகளில் மிகவும் ஆழமானது மாவீரர்களைப் பெற்ற தாய்மார்களின் கைகளில் ஏற்றப்பட்ட ஈகைச் சுடர்களாகும். தமது பிள்ளைகளை இழந்த தாய்மார்கள் மீண்டும் அதே மண்ணில் நின்று விளக்கேற்றினர். சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளை இழந்தவர்கள். சிலர் தமது பிள்ளைகளின் கல்லறைகள் இருந்த இடத்தையே இன்று அடையாளம் காண முடியாதவர்கள். ஆயினும், அவர்கள் கைகளில் ஏற்றிய சிறிய விளக்குகளுக்குள் பல ஆண்டுகளாக அணையாமல் இருந்த துயரங்கள் எரிந்துகொண்டிருந்தன.

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் தாயகத்தில் பெரும்பாலான மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டன. கல்லறைகள் தரைமட்டமாக்கப்பட்டன. நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட்டன. சில துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. சில இடங்களில் நினைவிடங்களுக்குச் செல்வதற்கே மக்கள் அனுமதி பெற வேண்டிய நிலை தொடர்கிறது. ஆனால், துயிலும் இல்லங்களை அழித்துவிடுவதால் அவற்றின் வரலாற்றை அழித்துவிட முடியாது. கல்லறைகள் இல்லாத நிலங்களிலும் மக்கள் தமது பிள்ளைகளை நினைவுகூர்கிறார்கள். நினைவுச் சின்னங்கள் இல்லாத இடங்களிலும் விளக்கேற்றுகிறார்கள். பெயர்கள் அழிக்கப்பட்ட இடங்களிலும் தமது உறவுகளின் பெயர்களை மனங்களில் சுமந்து நிற்கிறார்கள்.

ஒரு துயிலும் இல்லம் என்பது ஒரு காலத்தின் அரசியல் வரலாறு. அது எனது இனத்தின் பண்பாட்டின் அடையாளம். ஒரு தலைமுறையின் கனவுகள், நம்பிக்கைகள், இழப்புகள் ஆகியவற்றின் நினைவிடம். அந்த நிலங்களை அழித்துவிட்டு, அந்த நிலங்களுடன் வாழ்ந்த மக்களின் நினைவுகளையும் அழித்துவிடலாம் என்று கருதுவது வரலாற்றைப் புரிந்துகொள்ளாத அணுகுமுறையாகும்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நிலைநாட்டப்பட்ட நினைவேந்தல் உரிமை

இந்த ஆண்டின் மாவீரர் வாரம் ஆரம்பித்த நாளிலிருந்தே வடக்கு கிழக்கில் பொலிஸாரின் தலையீடுகளும் விசாரணைகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றன. நினைவேந்தல் பாடல்கள், மாவீரர்களின் படங்கள், தமிழீழ வரைபடம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவதற்கு எதிராகப் பொலிஸார் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. மன்னாரில் மாவீரர் படங்கள் தொடர்பாக இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கிளிநொச்சியில் பதாகைகள் அகற்றப்பட்டதையடுத்து எட்டுப் பேர் கைது செய்யப்பட்டனர். ஆயினும், இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் தமது நினைவேந்தல் ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.

நினைவுகூர்வதற்கான உரிமை என்பது மக்களின் அடிப்படை உணர்வுரிமைகளில் ஒன்று. இறந்தவர்களை நினைவுகூர்வதைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துவதும், உறவுகளின் துயரத்தைப் பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்துவதும் அந்த உரிமையின் மீதான கேள்விகளை எழுப்புகின்றன. ஆட்சி மாறினாலும் தமிழர் நினைவுகளின் மீது தொடரும் தலையீடுகள் மாறவில்லை என்ற இலங்கையின் உண்மையான நிலைமையை இம்முறையும் இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்தின.

ஒளியால் வரையப்பட்ட தேசம்

மாலை 6.05 மணிக்கு நினைவொலி எழுப்பப்பட்டது. 6.06 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. 6.07 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. அந்தச் சில நிமிடங்களில் தாயகத்தின் பல்வேறு திசைகளிலும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன. தாய்மார்கள், தந்தையர்கள், சகோதரர்கள், உறவினர்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பல தலைமுறையினர் அந்த ஒளிகளின் முன்னால் நின்றனர்.

ஒரு காலத்தில் இனப்படுகொலைப் போரின் பெரும் இருளுக்குள் வாழ்ந்த நிலம், இன்று தனது நினைவுகளை விளக்குகளால் வெளிப்படுத்தியது. ஒவ்வொரு துயிலும் இல்லமும் ஒளிர்ந்தது. ஒவ்வொரு நினைவிடமும் மக்களின் காலடிகளால் நிறைந்தது. ஒரு நிலத்தின் மீது எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் அந்த நிலத்துடன் மக்களுக்கு இருக்கும் உறவைத் துண்டித்துவிட முடியாது என்பதை இந்த மாவீரர் நாள் மீண்டும் வெளிப்படுத்தியது.

உண்மையில், ஒளிகளால் ஈழ மக்கள் தமது தேசத்தை மீண்டும் வரைந்தார்கள். அது வெறுமனே ஒரு வரைபடத்தின் கோடுகளால் வரையப்பட்ட தேசமல்ல. தாய்மார்களின் கண்ணீராலும், மாவீரர்களின் நினைவுகளாலும், அணைய மறுக்கும் விளக்குகளாலும் வரையப்பட்ட தேசம்.

ஒத்தவை: