நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

பொசொன் செய்தி


“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்”

இலங்கை அரசு ஜூன் 10, 2025


இவ்வாண்டு (2025),பொசொன் வாரம் ஜூன் 07 முதல் ஜூன் 13 வரை நடத்தத் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றது. இலங்கையில் பெளத்தப் பரம்பலின் வரலாற்று நகரங்களான அனுராதபுரம், மிகிந்தலை மற்றும் பகுதிகளில் அரச ஆதரவில் இது நடைபெற்றுவருகின்றது. இதற்கு தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்த மார்க்சிய ஜனாதிபதி அனுரா குமார திசநாயக்கே, வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.இவற்றில் அவர் கூறிய கருத்துகளில் பின்வரும் அம்சங்கள் அடங்கியிருந்தன.

1) எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும், மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும், பொசொன் தினத்திலாகும்.

2) பௌத்த மதத்தின் வருகையுடன் இலங்கையில் ஏற்பட்ட மாற்றமானது, இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது.

3) இந்த பௌத்த விழுமியங்களைக் கொண்ட நிலத்தை- முழு இலங்கையை-ப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிப்பது ஒரு அரசின் பொறுப்பாகும்.

4)பொசொன் பௌர்ணமி தினத்தில் வலியுறுத்தப்படும் உயர்வான குணங்களில் ஒன்றாக அஹிம்சையே காணப்படுகிறது.

5) அநுராதபுரத்தை அதன் பண்டைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்திய உதவியின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளது.

6) எந்த தேசமும் நிலைத்து நிற்க வலுவான அடித்தளம் தேவை. புத்தரின் தத்துவத்தின் மூலம் இலங்கை மக்கள் அத்தகைய வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளனர்.  

7) இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் பெளத்த தர்மத்தின் புரிதலுடன் ஒளிரட்டும்.  என்பன முக்கிய அம்சங்கள் ஆகும்.

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப்பிரிவு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியும், உரையும் வருமாறு:

ஜூன் 10, 2025

பொசொன் வாழ்த்துச் செய்தி

பொசொன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசொன் தினத்திலாகும்.

சமூக முன்னேற்றத்துடன் ஆன்மீக மலர்ச்சியை ஏற்படுத்த காரணமாக அமைந்த அந்த செழுமையான நிகழ்வு நமது நாட்டில், கலாசார, சமூக மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மேம்படுத்தியது. புத்த தர்மம் மற்றும் அதனுடன் இணைந்த வாழ்க்கை சூழலுக்கு வழிகாட்டி, தர்மங்களால் மேம்பட்ட சமூகத்தின் தோற்றத்திற்கும் பொசொன் காரணமாக அமைந்தது.

இதேபோல், ஆட்சியாளரும் மக்களும் வன்முறையைக் கைவிட்டு அகிம்சையைத் தழுவுவதே இதன் அடையாளமாகும். பொசொன் பௌர்ணமி தினத்தில் வலியுறுத்தப்படும் உயர்வான குணங்களில் ஒன்றாக அஹிம்சையே காணப்படுகிறது. குறிப்பாக, முழு உலகமும் ஒவ்வொரு நிலைமைகளில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய காலகட்டத்தில், அகிம்சை என்பது தன்னுடையதும் பிறருடையதும் சுதந்திரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாப்பதாக அமையும். அது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நடத்தையாகும். எனவே, பொசொன் பௌர்ணமி தினத்தில் பொதிந்துள்ள அகிம்சையின் பெறுமதி இன்றளவில் அதிகமாக உணரப்படுகிறது.

மஹிந்த தேரர் இந்த நாட்டிற்கு வழங்கிய உன்னதமான பௌத்த தர்மத்தில், “ஒருவர் வளமானதை வளமானதாகவும் வளமற்றதை வளமற்றதாகவும் பார்க்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு அந்த எண்ணமும் ஒழுக்கமும் கொண்ட பொறுப்புள்ள மக்களே தேவைப்படுகின்றனர் என்பதையும் வலியுறுத்தினார். அந்த சமூகத்தை மீண்டும் இலங்கையில் கட்டியெழுப்பி, நாட்டுக்குத் தேவையான புதிய நெறிமுறை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் அணுகுமுறைகளுடன் கூடிய நவீன நாகரிகம் கொண்ட நாட்டை உருவாக்கும் கைவிடமுடியாத பொறுப்பு, எம் மீது சாட்டப்பட்டுள்ளது.

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே, நாம் எதிர்பார்க்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை நடைமுறை சாத்தியமாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கூட்டு முயற்சிக்காக அனைவரும் ஒன்றுபடுவோமென பொசொன் தினத்தில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இலங்கையர்கள் அனைவரினதும் எண்ணங்கள் தர்மத்தின் புரிதலுடன் ஒளிரும் சிறப்பான பொசொன் தினமாக அமையட்டும்!

------------------------------------

பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்

– ஜனாதிபதி

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இன்று (10) நடைபெற்ற தேசிய பொசொன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

“பௌத்த தர்மத்தால் முழு உலகமும் ஒளிரட்டும்” என்ற தொனிப்பொருளின் கீழ், இம்முறை, தேசிய பொசொன் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை தேசத்தை நாகரிக மாற்றத்திற்கு இட்டுச் சென்ற மகிந்த தேரரின் வருகை மற்றும் மிஹிந்தலையை மறந்துவிட்டு, தேசிய பொசொன் நிகழ்வை கொண்டாட முடியாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

எனவே, இவ்வாறான ஆன்மீக விழுமியங்களைக் கொண்ட நிலத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது ஒரு அரசின் பொறுப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தப் பொறுப்பை பூமியுடன் உணர்வுபூர்வமான தொடர்புடைய பிரஜைகளால் மாத்திரமே நிறைவேற்ற முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அநுராதபுர நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் நமது நாடு தேரவாத பௌத்த தத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக மாறியது. சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக விழிப்புணர்வுக்கும் வழிவகுத்த இந்த அற்புதமான நிகழ்வு, வெறும் மத அர்த்தத்தைத் தாண்டி, கலாசாரம், சமூகம் மற்றும் அரசியல் உட்பட நமது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த சமூகத்தை மீண்டும் இந்த பூமியில் நிலைநிறுத்துவதன் மூலம் நாட்டிற்கு அவசியமான சமூக மற்றும் சுற்றாடல் நெறிமுறை சார்ந்த புதிய மனப்பான்மையுடன் கூடிய நவீன நாகரீக அரசை கட்டியெழுப்புவதற்கான கைவிட முடியாத பொறுப்பை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இலங்கையின் முதல் நகரம், முதல் குளம், முதல் அறுவை சிகிச்சைத் தளம் மற்றும் யோத கால்வாய் போன்ற பாரம்பரியங்களைக் கொண்ட அநுராதபுரத்தை அதன் பண்டைய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்திய உதவியின் கீழ் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

எந்த தேசமும் நிலைத்து நிற்க வலுவான அடித்தளம் தேவை. புத்தரின் தத்துவத்தின் மூலம் இலங்கை மக்கள் அத்தகைய வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளனர். கல்வியில் பின்னடைந்த சமுதாயத்தில் வலிமையான பிரஜைகளை எதிர்பார்க்க முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தம் இந்நாட்டில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. விகாரைகளைப் பிரிவெனாக்களாக மாற்றுவதன் மூலம், இந்நாட்டு மக்களுக்கு ஆன்மீகத்தையும் அறிவையும் வழங்கும் சமூக நோக்கத்தை நிறைவேற்றுவதில் பௌத்தம் பெரும் பங்காற்றியது. இது ஒரு நாகரீக சமூக பொறிமுறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதற்காக 2500 ஆண்டுகால வரலாற்றில் இந்நாட்டில் செயற்பட்ட தேரர்கள் அனைவருக்கும் நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஆனால் இப்போது அந்தச் சமூகப் பொறிமுறை வீழ்ச்சியடைந்து விட்டது. சில பொலிஸார் குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலையில் உள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் சட்டவிரோத கடவுச்சீட்டுகளை வழங்கும் நிலை தோன்றியுள்ளது.

பாதாள உலகத் தலைவர்களுக்கு விமானப் பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள சிலர் சட்டவிரோதமாக கைதிகளை விடுவித்துள்ளனர். போக்குவரத்துத் திணைக்களத்தில் உள்ள சில அதிகாரிகள் சட்டவிரோத செயல்களைச் செய்துள்ளனர். இந்த நிறுவனங்கள் குறித்து பிரஜைகள் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. எனவே, பிரஜைகளின் பிரஜைப் பொறுப்பை உருவாக்க நெறிமுறை சார் திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை இந்தப் பௌத்த தத்துவத்தின் மூலம் பெறலாம்.

ஒரு நெறிமுறை சார்ந்த தேசமாக, இந்த அரச நிறுவனங்களின் பின்னடைவை மீண்டும் மீட்டெடுக்க நாம் செயற்பட்டு வருகிறோம்.இந்த பணியை கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண குடிமக்களின் ஆதரவும் நமக்கு அவசியம். இந்த வீழ்ச்சியடைந்த யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பௌதிக மற்றும் ஆன்மீக ரீதியாக மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு இந்த நாட்டை மாற்றும் பொறுப்பைக் கைவிடாமல் நிறைவேற்ற, சாதாரண மக்களும் ஒன்றுபட வேண்டும்.

இரண்டு வருடங்களாக அரச அனுசரணையுடன் தேசிய பொசொன் நிகழ்வை நடத்த முடியாமல் இருந்த நிலையில், இது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுத்து மிஹிந்தலையில் தேசிய பொசொன் நிகழ்வை நடத்தியதற்காக மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர், ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

மிஹிந்தலை விகாரவாசி வண, சுருக்குளமே இந்திரரதன தேரரால் வரவேற்பும், நோக்கம் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, அமைச்சர் வசந்த சமரசிங்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சேன நாணாயக்கார, திலின தாருக சமரகோன், பாக்ய ஸ்ரீ ஹேரத், அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஒத்தவை: