நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

மண்டைதீவு - மனிதப் புதை கிணறு


மண்டைதீவுக் கிணறுகளை தோண்டுமாறு காவல்நிலையத்தில் முறைப்பாடு

GTN September 4, 2025

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால், முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் போது, வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன், திருனாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரும் முறைப்பாட்டாளர்களுக்கு ஆதரவாக  காவல் நிலையத்தில் பிரசன்னமாகி இருந்தனர். அதன் போது, முறைப்பாட்டாளர்கள் தெரிவிக்கையில்,

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள்  மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள  கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒத்தவை: