முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக பகிரங்க பிடியாணை
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்த விடயம் தொடர்பில் வெலிகம காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராகப் பகிரங்க பிடியாணை பிறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணைக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தேடப்பட்டு வரும் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், விகாரையொன்றிலே தேரர் போல வேடமிட்டு நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பஸீர் IBC க்குத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விகாரைகளுக்கு சென்று பார்வையிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர், அவ்வாறு ஒழிந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக காணப்படுவதுடன் ஏறத்தாழ சந்தேகத்திற்கிடமான 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
வெலிகமவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒரு சந்தேக நபரைக் கைது செய்யச் சென்றபோது, வெலிகம பொலிஸார் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு பொலிஸ் சார்ஜன்ட் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவை மீறி தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாகவும், அவரைக் கைது செய்யக் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
