நிதி உதவி வழங்க !

QR

UPI ID : enb@axis.com

இணைப்புகள்
gpay

நாடும் நடப்பும் தொகுப்பு


தேசபந்து வீட்டிலிருந்து 1009 மதுபான போத்தல்கள் மீட்பு

துப்பாக்கி, கையடக்கத் தொலைபேசிகளும் கையகம்

March 19, 2025 லோரன்ஸ் செல்வநாயகம்

ஹோகந்தர பிரதேசத்திலுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது அங்கிருந்து 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, 2 ஆப்பிள் ரக கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் தெரிவித்தார்.

அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘2023.12.31ஆம் திகதி வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாத்துறை ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட 6 சந்தேகநபர்களை கைது செய்வதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவு தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்தினர்.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பில் நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை முன்வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

ஹோகந்தர பிரதேசத்தில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் சோதனையிட்டபோது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 795 மதுபான போத்தல்கள், 214 வைன் போத்தல்கள் உட்பட 1009 மதுபான போத்தல்களை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோன்று தேசபந்து தென்னக்கோன் பயன்படுத்தியதாகக் கருதப்படும் துப்பாக்கி ஒன்றும் இரண்டு ஆப்பிள் ரக ஸ்மார்ட் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி 

நீண்ட நேர பரிசீலனைக்கு பின்னர் நீதிமன்றம் உத்தரவு March 19, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை விதிக்க நடவடிக்கை

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை  Audio,Video வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

அதன்படி, நாளை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது.

குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கம் நீக்கப்படுமா இல்லையா? என்பது பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

ஜோ பைடனின் பிள்ளைகளின் பாதுகாப்பு உடனடியாக நீக்கம் March 19, 2025

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர், மகள் ஆஷ்லே ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இரகசிய சேவை பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் அறிவித்த ட்ரம்ப், ஹண்டர் பைடனுக்கு நீண்ட காலமாக இரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்தியுள்ளனர். அவர் இந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதும் பாதுகாப்புப் பிரிவில் 18 முகவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இது அபத்தமானது. அதனால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஹண்டர் பைடன், ஆஷ்லே பைடன் ஆகியோருக்கு இரகசிய பாதுகாப்பு சேவை நீக்கப்படுகிறது என்றுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவி நீங்கிச் செல்வதற்கு முன்னர் தம் பிள்ளைகளுக்கான இரகசிய பாதுகாப்பு சேவையை எதிர்வரும் ஜுலை மாதம் வரை நீடித்திருந்தார். இந்த சூழலிலேயே அவர்களது இரகசிய பாதுகாப்பு சேவையை ட்ரம்ப் நீக்கியுள்ளார். ட்ரம்பின் இ ந் நடவடிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் உடனடியாக எதனையும் தெரிவிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

த கார்டியன்.

ஒத்தவை: