திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, 2017 - அக்டோபர் மாதம் இந்திய இலங்கை அரசாங்கம் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
Digital News Team Thinakkural 27 மே, 2025
மன்னார் மாவட்டத்தில் இந்திய நன்கொடை ஆதரவுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு
மன்னார் ஜிம் பிறவுண் நகர் மாதிரி கிராமத்தினை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் டிபி சரத் ஆகியோர் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து 24 பயனாளி குடும்பங்களிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு ரஞ்சித் ஆரியரத்ன, மன்னார் மாவட்ட செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகாரசபை தலைவர் மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகள், நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், வடக்கு மாகாண சபை மற்றும் மன்னர் மாவட்ட நிர்வாகத் துறை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய அரசாங்கத்தின் நன்கொடை மூலமாக இலங்கை அரசின் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து கூட்டாக முன்னெடுக்கப்படும் குறித்த மாதிரி கிராம வீடமைப்பு திட்டம் நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.
மாவட்ட வீடமைப்பு குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளுக்கு அமைவாக இலங்கை முழுவதிலும் குறைந்த வருமானம் பெறும் 600 குடும்பங்கள் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு மாவட்ட வீடமைப்பு சபைகளால் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் 24 வீடுகள் இம்மாதிரிக் கிராம வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படுகின்றன.