செம்மணி மனித புதைகுழி – இன்று ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு
June 3, 2025 GTN News
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.
அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும், கை எலும்பு ஒன்றும் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் , நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவை , அவசர அவசரமாக புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகளுடன் கூடிய , எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு கூட்டு தொகுதியில் ஒரு எலும்பு கூட்டு தொகுதி முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரிய வழக்கு – கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது!!
GTN News June 4, 2025
செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06.06.25) வழங்கப்படவுள்ளது.
செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று (03.06.25 செவ்வாய்க்கிழமை வரையில் ஏழு மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அப்பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் . நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர்.
குறித்த விண்ணப்பம் மீதான விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரியின் அபிப்பிராயத்தையும் யாழ்ப்பாண பொலிசாரின் நடவடிக்கை தொடர்பிலும் அறிக்கையை தருமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அது தொடர்பில் கட்டளை பிறப்பிக்கப்படும் என திகதி குறித்துள்ளார்.